பேரன்டிங் டிப்ஸ்
பிடிவாதம், கோபம், சோம்பல் போன்ற குணங்கள் சில பிள்ளைகளுக்கு இருப்பதுண்டு. பிள்ளையின் இந்த குணங்களை மாற்ற விரும்பும் பெற்றோர் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.
முதல் மாற்றம் பெற்றோரிடம் இருந்து தொடங்க வேண்டும். பொதுவாக பெற்றோரின் பழக்கமே பிள்ளையின் குணமாக மாறுகிறது. குழந்தையை நாய், பேய், பன்னி, எருமை, முட்டாள் என்றெல்லாம் திட்டினால், பிள்ளையும் அதே வார்த்தைகளால் சரளமாகத் திட்டவே செய்யும். ஆகவே, குழந்தையிடம் என்னென்ன நல்ல குணங்கள் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த குணங்களை எல்லாம் பெற்றோர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டாவது, குழந்தையின் கோபம் பிடிவாதம், உணவுப் பழக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றை ஒருசில நாளில் மாற்றிவிட முடியாது. அறிவுரை சொன்னவுடன் சட்டென மாறுவதற்கு குழந்தைகள் ஒன்றும் ரோபோ அல்ல. எனவே குழந்தைகள் மாறுவதற்குக் காலம் ஆகும், அதுவரை மீண்டும் மீண்டும் நல்ல குணங்களை சொல்லிக் கொடுத்து, அவர்கள் மாறுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
மூன்றாவது. அன்பு, பாசம், கண்டிப்பு காட்டி வளர்த்தாலும் மரபணு காரணமாக பிள்ளையிடம் சில குணங்கள் ஒட்டியிருக்கும். வன்முறை, அசட்டுத்துணிச்சல், மந்தமான படிப்பு போன்றவை குழந்தையின் ஜீன்களில் இருக்கலாம். இந்த நிலையில் பெற்றோரால் மட்டும் பிள்ளையின் குணத்தை மாற்றிவிட முடியாது. சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவர், மனவள ஆலோசகர் போன்றவர்களின் உதவியை நாட வேண்டும்.
ஆகவே, இந்த மூன்றையும் கடைப்பிடித்து பிள்ளைகள் குணத்தை மாற்ற வேண்டியது பெற்றோரின் கடமை. இதனை பெற்றோர் அக்கறையுடன் செய்யவில்லை என்றால் காவல் துறையும் நீதிமன்றமும் கண்டிக்க வேண்டிய சூழல் உருவாகி விடும். ஆகவே, குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் அக்கறை செலுத்துங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
