ஜெர்மனி சர்ச்சை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, காக்கா முட்டை விக்னேஷ், வாழை படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படப்பிடிப்பை இளையராஜா குத்துவிளக்கேற்றி படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியது இதுதான்.
’’நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.
உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.
ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம்.
அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ, அதுதான் சரஸ்வதி எனக்குக் கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர்.
இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
வயிற்றில் அசைவு இல்லாத குழந்தைக்கு அசைவு வந்ததற்கு இளையராஜாவின் இசை காரணம் என்பது உண்மையா என்று மருத்துவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘’குழந்தைக்கு அசைவு இல்லை என்பதற்கும் உயிர் இல்லை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வயிற்றில் சில நேரங்கள் பிள்ளைகள் அசைவு இல்லாமல் நீண்ட தூக்கத்தில் இருப்பதுண்டு’’ என்கிறார்கள்.
