மந்திரச்சொல்
ஆசை இல்லாமல் மனிதரால் வாழ முடியாது. அன்பு இல்லாமல் மனித வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. ஆனால் இரண்டுமே அளவைத் தாண்டும்போது, நிம்மதியைப் பறிக்கின்றன.
தேவையான பொருட்களை வாங்குவதற்காக பணம் செலவிடுவதில் தவறில்லை. பல நேரங்களில் நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்காகவே அதிகம் செலவிடுகிறோம்.
ஒருவரிடம் ஆப்பிள் செல்போன் இருக்கிறது. மார்க்கெட்டில் ஆப்பிள் புதிய மாடல் அறிமுகமானதும், பழைய மாடலை கையில் வைத்திருப்பது கெளரவக் குறைச்சலாகத் தோன்றுகிறது. பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் பெரிய கார் வாங்கியதும் நம்முடைய காருக்கு மதிப்பு குறைகிறது. இங்கே பிரச்சினை அந்த பொருட்களில் இல்லை, ஒப்பீடுகளில் மட்டுமே இருக்கிறது. அதனால், மீண்டும் புதிது வாங்கினால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆசை தோன்றுகிறது. இந்த ஆசையே செலவை அதிகரிக்கிறது. எனவே, பணத்தை சேமிப்பதற்கு முதல் வழி அதிகம் சம்பாதிப்பது அல்ல. தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதுதான்.
ஆசையைக் குறைத்தால் பணம் மிச்சமாகும் என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு அன்பைக் குறைத்தால் வலி மிச்சமாகும் என்பதும் உண்மை. அன்பைக் குறைப்பது என்பதன் அர்த்தம் நேரடியாக அன்பு காட்டுவதைக் குறைப்பது அல்ல. அன்பு செலுத்துவதால் அவரிடம் எதிர்பார்ப்பதைக் குறைக்க வேண்டும்.
ஒருவரை நேசிக்கிறோம். அதற்காக அவர் நம்மை மதிக்க வேண்டும், நாம் அன்பு செலுத்தும் அளவுக்கு அவரும் அன்பு செலுத்தவேண்டும் என்று ஆசைப்படுவதுதான் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் வருகிறது. ஏமாற்றம் அதிகரிக்கும்போது கோபம் வருகிறது. கோபம் அதிகரிக்கும்போது உறவு சிதைகிறது. இங்கு நம்மை காயப்படுத்துவது அன்பு அல்ல. அன்புடன் இணைந்திருக்கும் அதிக ஆசை.
ஒரு தாய் மகனுக்காக நிறைய செய்திருக்கலாம். ஒரு கணவன் மனைவிக்காக பல தியாகங்களைச் செய்திருக்கலாம். ஒரு நண்பர் நண்பனுக்காக பல வருடங்கள் துணையாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக அதே அளவு அன்பு கிடைக்கவில்லை என்று சிந்திக்கத் தொடங்கினால் அங்கே அன்புக்குப் பதிலாக கணக்கு ஆரம்பமாகிறது. அந்த கணக்கு தொடங்கியவுடன் அன்பு குறைந்து, வலி அதிகரிக்கிறது.
பணம், அன்பு மீதான இரண்டு ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியும்.
புதிய விலை உயர்ந்த பொருள் வாங்கும் ஆசை வரும்போது மூன்று கேள்விகளைக் கேளுங்கள். இது எனக்கு உண்மையில் தேவையா? இதை வாங்கவில்லை என்றால் என்னாகும்? என் மகிழ்ச்சிக்கு வாங்குகிறேனா அல்லது மற்றவரிடம் என்னை நிரூபிக்க வாங்குகிறேனா என்று கேட்டுக்கொண்டால் பல தேவையற்ற செலவுகளைத் தடுக்க முடியும்.
அதேபோல் அன்பானவர் மீது கோபம் வரும்போது மூன்று கேள்விகளைக் கேளுங்கள். நான் நிஜமாக அன்பு செலுத்துகிறேனா, அந்த அன்புக்கு அவர் பதில் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா..? அவரை அன்பு செய்யக் கட்டாயப்படுத்தினால் என்னாகும் என்று கேட்டால், நமது அன்பை எங்கே நிறுத்துவது என்பது புரியும்.
ஒருபோதும் நம் அன்பைக் குறைக்க வேண்டாம். ஆசைகளைக் குறைக்க வேண்டாம். கட்டுப்படுத்தத் தெரிந்துகொண்டால் போதும். ஆசை குறைந்தால் செலவு குறையும்.
எதிர்பார்ப்பு குறைந்தால் ஏமாற்றம் குறையும். ஏமாற்றம் குறைந்தால் கோபம் குறையும். கோபம் குறைந்தால் உறவுகள் காப்பாற்றப்படும்.
உறவுகள் காப்பாற்றப்பட்டால் வாழ்க்கை அழகாகும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
.
