கோபப்படுவது பலவீனம். அடக்குவது கெடுதி. விலக்குவதே வலிமை.

மந்திரச்சொல்

கோபம் என்பது ஒரு உணர்வு. அது எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழலில் வருவது சகஜம். கோபம் வருவது தவறு அல்ல. ஆனால் அந்த கோபத்துக்கு எப்படி பதிலளிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கோபம் வரும்போது மூளை அதை ஆபத்து என்றே மொழி பெயர்க்கிறது. அதனால் அட்ரினலின், நோரட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பை அதிகமாக்குகிறது. எனவே, கோபப்படுபவருக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் உயர்கிறது. சுவாசம் வேகமாகிறது. தசைகள் இறுக்கமடைகின்றன. உடல் அதிக எச்சரிக்கை நிலையில் செல்கிறது.

அந்த நேரத்தில் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மூளைக்கு இருப்பதில்லை. அதற்குப் பதிலாக உடனே எதிர்வினை புரிவதற்கே உணர்வுகள் தூண்டுகிறது. அதனால்தான் கோபத்தில் ஒரு வார்த்தை பேசிவிட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்தும் நிலை உருவாகிறது. தொடர்ச்சியான அல்லது அடிக்கடி ஏற்படும் கோபமும், கோபத்தை வெளியே காட்டாமல் அடக்கி வைப்பதும் நீண்டகால மன அழுத்தம் இருதய ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது மருத்துவ உண்மை.

அதாவது, எனக்கு கோபம் இல்லை என்று நடிப்பது வேறு. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் அதை நான் புரிந்துகொண்டு கையாள்கிறேன் என்பது வேறு. ஒருவரிடம் கோபம் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து மனதுக்குள் வைத்துக்கொள்வது, அந்தப் பிரச்சினையைத் தீர்க்காது. மாறாக, மன அழுத்தம், எரிச்சல், உறக்கக் குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். சிலருக்கு பழி வாங்கும் உணர்வு மேலோங்கும். எனவே கோபத்தை வெடிக்க விடுவதும் சரியில்லை, கோபத்தை புதைத்து வைப்பதும் சரியல்ல.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

கோபம் வருவதற்கு முன்பே மனதைப் பயிற்சி செய்து வலிமையாக்க வேண்டும். யாராவது நம்மை அவமதித்தால், உடனே பதில் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும். கோபமாக இருக்கும் நிமிடத்தில் நான் இப்போது அவசரமாக ஏதேனும் முடிவு எடுக்க வேண்டுமா என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சில விநாடிகள் அமைதியாக இருப்பது, ஆழமாக மூச்சை விடுவது, தண்ணீர் குடிப்பது, அந்த இடத்திலிருந்து விலகுவது, பின்னர் பிரச்சினையைப் பற்றி பேசுவது போன்ற எல்லாமே எளிய தீர்வுகள். இவை சிறிய செயல்களாகத் தோன்றினாலும், கோபத்தின் வேகமான எதிர்வினையைத் தடுக்க உதவும்.

ஒருவர் உங்கள் காரை இடித்துவிட்டார் என்றதும் அவருடன் சண்டைக்குச் செல்வது நேரடியாக கோபத்தைக் காட்டும் பலவீனம். வெளியே கோபத்தைக் காட்டாமல் மனசுக்குள் கொதித்துக்கொண்டே இருப்பது அதைவிட மோசமான செயல்.

புத்திசாலித்தனமான முடிவு என்னவென்றால், ‘முதலில் என்ன சேதம் என்பதைப் பார்க்கலாம். அதன்பிறகு பிரச்சினையை பேசித் தீர்ப்பதா அல்லது காவல் துறையை நாடுவதா என்று பார்க்கலாம்’ என்று இயல்பு நிலைக்கு வரவேண்டும்.

முதல் நிலையில் கோபம் நம்மை ஆளுகிறது. இரண்டாவது நிலையில் கோபத்தை நம்முள் அடைத்து வைக்கிறோம். மூன்றாவது நிலையில் நாம்தான் கோபத்தை ஆளுகிறோம். இதுதான் உண்மையான மன வலிமை.

கோபப்படாமல் இருப்பது என்றால் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பது அல்ல. உணர்ச்சிகள் இருந்தாலும், அவற்றின் கட்டுப்பாட்டை நம்மிடம் வைத்திருப்பது. கோபத்தை வென்றவன் எதிரியை வென்றவனைவிட பெரியவன். ஏனென்றால் எதிரியை வெல்ல பலம் மட்டும் போதும். கோபத்தை வெல்ல அறிவும் பயிற்சியும், நிதானமும் தேவை.

கோபப்பட வேண்டிய நேரத்தில் ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அவர் மீது அடுத்தவருக்கு பயமும் மதிப்பும் வரும். அதை அனுபவித்துப் பாருங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment