ஏன் இந்த மாற்றம்
பக்கத்து வீடு, பள்ளிக்கூடம், கல்லூரி, பணியாற்றும் இடங்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்தே இருக்கும் சூழல் நிலவுகிறது. எனவே ஆணும், பெண்ணும் பேசவும் பழகவும் சான்ஸ் கிடைக்கிறது. இருவருடைய ரசனை, பார்வை, சிந்தனை ஆகியவை ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அவர்களுக்கு இடையில் நட்பு உருவாகிறது.
பள்ளி, கல்லூரி அல்லது பணியிடங்களில் மட்டுமே பழகுவதை நட்பு என்று சொல்லமுடியாது. அதை தாண்டி சினிமா, பீச், பூங்கா என்று செல்லும்போதே அந்த உறவு நட்பாக மாறுகிறது. இந்த நெருக்கம் ஒரு சில நேரத்தில் காதலாக மாறுவதுண்டு. அதாவது யாராவது ஒருவர் உடல் நலமில்லாத நேரத்தில், தோல்வி, ஏமாற்றம் போன்ற சோகத்தில் இருக்கும்போது ஒருவர் கொடுக்கும் அதீத ஆதரவும், தீவிர அன்பும் நட்பை காதலாக மாற்றிவிடுகிறது..
இந்த நேரத்தில் மிகப்பெரிய குழப்பம் வரும். அதாவது நண்பராகப் பழகியவரிடம் காதலைச் சொல்வது நியாயமா என்ற போராட்டம் மனதில் உருவாகும். இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கலாம்.
காதல், நட்பு இரண்டுக்குமே அடிப்படை பிரதிபலன் பாராது அன்பு செலுத்துவது மட்டும்தான். பொதுவாகப் பெண்கள் தன் தந்தையைப் போன்ற கணவனைத் தேடுகிறார்கள். ஆண்கள் தாயைப் போன்ற மனைவிக்கு ஆசைப்படுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், தந்தை, தாய் அளவுக்கு தன்னைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளும் துணை வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த பொறுப்பு, அக்கறையை நண்பரிடம் பார்க்கையில் அது காதலாக மாறிவிடுகிறது.
இந்த நிலையில் மனதில் ஏற்பட்டிருக்கும் உணர்வு காதலா அல்லது காமமா என்ற தெளிவு வேண்டும். அதாவது உடல் நெருக்கத்தைத் தாண்டி அவருடன் காலம் முழுக்க சேர்ந்து வாழும் விருப்பம் வந்துவிட்டால், அதை காதல் என்று சொல்லலாம். காதல் தோன்றினாலும் சொல்வதற்குத் தயங்குவார்கள்.
அதனால் நட்பு பாதிக்கலாம், தன்னை மட்டமாக நினைக்கலாம், திட்டம்போட்டு பழகியதாக நினைக்கலாம் என்று பயந்தே பலர் காதலை மனதுக்குள் மறைத்துக் கொள்கிறார்கள். இப்படி கோடிக்கணக்கான நபர்களின் காதல் செத்துப்போயிருக்கிறது.
தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசு மேல் என்பது போன்று தெரியாதவரை திருமணம் முடிப்பதைவிட, ஓரளவு அறிந்தவருடன் வாழ்க்கையைத் தொடர்வது உண்மையில் நல்லது. ஏனென்றால் முன்கோபி, செலவாளி, வாயாடி போன்ற குணம் முன்னரே தெரிந்திருக்கும் என்பதால், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
எனவே, நட்பு காதலாக மாறினால், கலங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்துவதற்கு பெண்ணை விட ஆண் அதிகம் தயங்குகிறான். ஆகவே, ஆண் நண்பரின் கண்களில் காதல் தெரிந்தால், பெண்ணே முன்வந்து பேசுவது தவறில்லை. வெளிப்படையாகவே திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேளுங்கள். பெரும்பாலும் சாதகமான பதிலே கிடைக்கும். அப்படியில்லை என்றால் நட்பு நிலையில் தொடருங்கள்.
நண்பன் அல்லது தோழி வாழ்க்கைத் துணையாக அமையும் வாழ்க்கை அலாதியானது. வேண்டாம் என்ற பதில் வந்தாலும் கோபப்படாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். நட்பு தொடரட்டும். காதலிக்கவில்லை என்றதும் நட்பில் இருந்து விலகுவது, காதலிக்கச்சொல்லி வற்புறுத்துவது நட்புக்கும் காதலுக்கும் செய்யும் துரோகம்.
எனவே, நட்பு காதலாவது நல்ல அனுபவம். ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
