உளவியல் உண்மை
நடிகரைப் பார்த்துப் பெண்ணும், நடிகையைக் கண்டு ஆணும் மயங்குவது ஒரு இயல்பான செயல். சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் மீதும் மயக்கம், காதல், ஏக்கம், கனவு போன்றவை வரலாம். இந்த ஒருதலைக் காதல் நிறைய பேருக்கு அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, ராஷ்மிகா மந்தனாவின் மீது காதலாக இருப்பவர்கள் புதிய படம் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவின் காதலராக மாறிவிடுவார்கள்.
ஒருசிலரது கற்பனையும் காதலும் மாறவே மாறாது. அதாவது இன்றும் பத்மினி, சரோஜாதேவியே அழகி என்று சொல்லும் பெருசுகள் உண்டு. அம்பிகா, ராதாவை விட அழகிகள் யாரும் இல்லை என்று சொல்லும் முதியவர்கள் உண்டு. சிம்ரன், தேவயானியை மறக்கமுடியாத நடுத்தர வயதினர் உண்டு. இப்போது நயன்தாரா, பிரியங்கா மோகன் என்று பிதற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று எம்.ஜி.ஆர். சிவாஜி தொடங்கி இன்றைய சிம்பு, தனுஷ் வரை ரசிகைகள் பிரேமத்துடன் இருக்கிறார்கள்.
இப்படி நடிகர், நடிகைகள் மீது காதல் இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் மனதுக்குள் மறைத்துக்கொள்பவர்களே அதிகம். மனதில் அடக்கப்பட்ட உணர்வுகளே கனவுகளாகவும், கற்பனைகளாகவும் வெளிவருவதாக சிக்மாண்ட் ஃப்ராய்டு, கார்ல் ஜங் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்லியிருக்காங்க.
வாழ்க்கையில் நேரடியாக அனுபவிக்க முடியாதவற்றை கற்பனை செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். கலைஞர்களின் அழகு, திறமை, பேச்சு, சிரிப்பு போன்றவைகளை எல்லாம் நினைத்து நினைத்து மகிழ்கிறார்கள். இந்த கற்பனை நிறைய பேருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனதுக்குப் பிடித்த கலைஞரை நினைத்தாலே மனம் மலர்கிறது.
இதுபோன்ற கற்பனைகளை, கனவுகளை எல்லாம் ஒரு எல்லைக்குள் நிறுத்திக்கொள்வது நல்லது, நிஜமாக்க முயலக்கூடாது. அதாவது சினிமா கலைஞர் போன்று மாப்பிள்ளை அல்லது மணப்பெண் வேண்டும் என்று தேடுவது, நிபந்தனைகள் விதிப்பது வாழ்க்கையைச் சிக்கலாகிவிடும். பிடித்த கலைஞரின் சாயலில் இருப்பவர்களைக் காதலிப்பதும் தவறான பாதையில் முடிந்துவிடும்.
கலைஞர்களை ரசிப்பதையும் எல்லைக்குள் வைத்துக்கொள்வது நல்லது. நடிகர் அல்லது நடிகையை காமப்பொருளாக எண்ணுவது சரியான சிந்தனை இல்லை. ஏனென்றால், அதன் பிறகு நிஜ மனிதர்களுடன் உறவு கொள்வது சிரமமாக இருக்கும். சினிமா நடிகர், நடிகைகளை ரசியுங்கள், மகிழ்ச்சியாகப் பாருங்கள். கண்டபடி கற்பனையை ஓட விட்டு அவஸ்தைப்படாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
