நினைத்தது கிடைப்பதற்கு போராட வேண்டுமா..?

வெற்றிக்கு ஆசைப்படுங்கள்

நீட் தேர்வு எழுதி மருத்துவராக கனவு காண்கிறார்கள். யுபிஎஸ்சி தேர்வு எழுதி கலெக்டராக ஆசைப்படுகிறார்கள். படித்து முடித்ததும் வெளிநாட்டு வேலையில் சேர விரும்புகிறார்கள். இவை எல்லாமே நல்ல லட்சியங்கள். அதேநேரம், இந்த லட்சியங்களை அடைவதற்கு நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த கனவை அடைவதற்கு நிறைய சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டும். முழு ஈடுபாடு காட்டினால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும் என்பதால் அடிக்கடி மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்க்கு ஆளாகும் சூழல் உருவாகும்.

மற்ற அனைவரும் ஜாலியாக கிடைத்ததை வைத்து திருப்தி அடையும்போது, நாம் மட்டும் நினைத்ததை சாதிப்பதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டுமா என்ற கேள்வி ஒவ்வொரு நபருக்கும் வரும். இது போன்ற தருணங்களில் கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தி அடைவோம் என்ற மனநிலைக்கு மாறிவிட வேண்டாம். எல்லோரும் போகும் பாதையில் நாமும் போகலாம் என்று சமாதானம் அடைய வேண்டாம்.

ஸ்ட்ரெஸ்க்குப் பயந்து லட்சியத்தைக் கைவிடுவது வாழ்நாள் முழுவதும் வருத்தம் கொடுக்கும். எனவே, இப்படி குழப்பம் வரும் சூழலில் ஸ்ட்ரெஸ் மிகவும் நல்லது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஸ்ரெஸ் தடைக் கற்கள் அல்ல, படிக்கற்கள் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள். ஸ்ட்ரெஸ் இல்லாமல் இந்த உலகில் யாரும் எந்த வெற்றியும் பெற்றதே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

லட்சியத்துக்காக போராடுவதை சிலர் முட்டாள்தனம் என்று கிண்டல் செய்யலாம். ஆனால், லட்சியத்தை அடைந்தவுடன் அவர்களே பாராட்டுவார்கள். எனவே, பிறர் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல.  

லட்சியம் என்பது அவரவர் விருப்பம். அதில் வெற்றி அடைந்தால் நல்லது, தோல்வி அடைந்தாலும் நல்லது. அந்த லட்சியத்தை இடையில் கைவிடுவது மட்டுமே துயரம். எனவே, லட்சியங்களை யாருக்காகவும் எதற்காகவும் தியாகம் செய்யாதீர்கள். லட்சியம் அடைவதற்கான வழியில் தென்படும் துன்பங்களையும் துயரங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். லட்சியத்துக்கு மட்டுமே ஏழ்மையை உடைக்கும் சக்தி உண்டு. லட்சியத்துக்கு மட்டுமே வாழ்க்கைய திசை மாற்றும் சக்தி உண்டு. எனவே, ஸ்ட்ரெஸ்க்குப் பயந்து லட்சியத்தைப் புறக்கணிக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment