ஆபத்தான மனநிலை
ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த நம் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தலைவர்களில் மகாத்மா காந்திக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதேநேரம், காந்தியடிகளும் ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கியிருந்தார் என்பது தெரியுமா?
பொதுவாக எந்த ஒரு செயலையும் தொடர்ந்து 100 நாட்கள் செய்துவந்தால், அது பழக்கமாக மாறிவிடும் என்கிறார்கள். அதாவது காலை எழுந்ததும் குளிப்பது அல்லது கடவுள் பாடல் கேட்பது போன்றவைகளை தொடர்ந்து செய்துவந்தால், அது பழக்கமாக மாறிவிடும். வாழ்நாள் முழுக்க அந்தப் பழக்கம் தொடரும்
அதனால் பழக்கத்தை மலைப்பாம்புன்னு சொல்வாங்க. மலைப் பாம்பு எளிதில் இரையைப் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. இது நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் இரண்டுக்குமே பொருந்தும். இந்த பழக்கமே அடிமைத்தனம்.
காலையில் குளித்த பிறகே சாப்பிடுவது என்ற பழக்கத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்றால், ஏதேனும் காரணங்களால் குளிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, மிகப்பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள் இதற்கு காந்தி வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லலாம்.
மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் சமைக்காத சைவ உணவு சாப்பிடுவதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக பால், உப்பு, இனிப்பு போன்றவைகளை அறவே தவிர்த்தார். ஒரு கட்டத்தில் காந்தியின் உடல் மிகவும் நலிவடைந்த பிறகு, வேறு வழியே இல்லாமல் பால் குடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், மாட்டுப் பால் குடிப்பதற்கு தயங்கி ஆட்டுப்பால் குடித்தார். ஆசிரமத்திலும் அவர் பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆட்டுப் பால் சேகரிப்பது மிகவும் கடினமான செயலாக இருந்தது.
அதேபோல் தினமும் நூல் நூற்பதை ஒரு கடமையாக செய்துவந்தார். வயிற்றை சுத்தம் செய்வதற்கு இனிமா எடுத்துக்கொள்வது காந்தியின் வழக்கமாக இருந்தது. இதனை அவரது சீடர்களுக்கும் கற்றுக்கொடுத்து, தன்னுடைய பழக்கமே சரியானது என்பதை நிலைநாட்டுவதற்கு காந்திஜி கடைசி வரையிலும் போராடிக்கொண்டே இருந்தார்.
உண்மை என்னவென்றால், நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்ற பாகுபாடு பாராமல் எந்த பழக்கத்திலும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரமாக இருப்பதே சிறப்பு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
