பிள்ளையிடம் ரொம்ப பாசம் வைக்காதீங்க

நிஜமான உண்மை

பட்டாம்பூச்சி போன்று ஜாலியான பெண் என்றாலும், திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொண்டதும் பொறுப்பான அம்மாவாக மாறிவிடுகிறார். அதன் பிறகு குழந்தையைச் சுற்றியே அவரது உலகம் சுழல்கிறது. உலகின் மிகச்சிறந்ததை எல்லாம் தன் குழந்தைக்குத் தர ஆசைப்படுகிறாள். அப்பாவாக மாறிய ஆண் மகனும் அதே போன்ற பாச உணர்வுக்கு ஆளாகிறான். இரண்டு பேரும் பிள்ளைக்காக வாழ்வது, பிள்ளைக்காக உழைப்பது என்று பாச மழை பொழிகிறார்கள்.

பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதில் என்ன தப்பு என்று கேட்கிறீர்களா..? பாசம் நல்லது. அதேநேரம் அதீத பாசம் ஆபத்து. இதையே கலியுகத்தின் அடையாளம் என்று கண்ணபிரான் மகாபாரதக் கதையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். நிறைய பேருக்கு அந்த மகாபாரதக் கதை தெரிந்திருக்கும்.  

அதாவது கலியுகம் எப்படியிருக்கும் என்று கேட்கும் நகுலனுக்கு ஒரு காட்சியை கண்ணபிரான் சுட்டிக்காட்டுவார். ஒரு பசு குட்டி போட்டதும், பாசத்துடன் குட்டியை நாவினால் நக்கிக்கொடுப்பது இயல்பு. சில நொடிகள் நக்கிக் கொடுத்துவிட்டு பால் குடிக்கத் தூண்டுவதே பசுவின் வேலை. ஆனால், அந்த பசு பாச மிகுதியால் மீண்டும் மீண்டும் நக்கிக்கொடுத்து குட்டியின் உடலுக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.  

இந்தக் காட்சி போன்றே இன்றைய பெற்றோர் நடந்துகொள்கிறார்கள். தங்கள் பிள்ளையைப் பொக்கிஷம் போன்று பாதுகாக்கிறார்கள். பணத்துக்காகவும், பசிக்காகவும் பிள்ளை எந்த சிரமமும் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறார்கள்.

இதனால் பிள்ளைகளுக்கு பசி எடுப்பதில்லை, உறவுகளின் தேவை புரிவதில்லை, பணத்தின் அருமை தெரிவதில்லை, தோல்வியின் வலி பிடிப்பதில்லை. இந்த குழந்தைகள் வளர்ந்து நிஜ உலகத்தைக் கண்டதும் அதிர்ந்து போகிறார்கள். சுலபமான வேலையை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.. அம்மா, அப்பா போன்று தனக்கு சேவை செய்யும் துணை அமையும் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.

விரும்பியதை எல்லாம் பெற்றோர் நிறைவேற்றியது போன்று எல்லோரும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடப்பதில்லை. எனவே வேலையை வெறுக்கிறார்கள். விவாகரத்து செய்கிறார்கள். தங்களை இப்படி வளர்த்ததற்கு பெற்றோர் மீது கோபம் கொள்கிறார்கள்.

எனவே அளவுக்கு மீறிய செல்லம் பிள்ளைக்கு நல்லதில்லை. குழந்தைகளுக்கு தோல்வியைக் கற்றுக் கொடுங்கள். போட்டி, பிரச்னைகளை அவர்களே சமாளிப்பதற்கு வழி காட்டுங்கள். பிள்ளைகள் தாங்களாகவே ஜெயிக்கும் போதுதான் தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கையே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும். எனவே, பிள்ளை மீது அளவோடு அன்பு செலுத்துங்கள். அதுவே பிள்ளையின் எதிர்காலத்துக்கு நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment