ஞானகுரு பதில்
கேள்வி : காவல் துறை, நீதிமன்றத்திலும் லஞ்சம் விளையாடுகிறது. பணம் உள்ளவர்களிடம் சட்டமும் பணிந்துவிடுகிறது. எனவே, இப்படியொரு அமைப்பு தேவையா..?
- எஸ்.ராஜசியாமளா, மைசூர்.
ஞானகுரு :
. பலம் வாய்ந்த சிங்கம், யானையை எல்லாம் தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலம் மனிதன் அடிமையாக்கி விட்டான். அதே போல் தன்னுடைய பலம் அல்லது புத்திசாலித்தனத்தின் மூலம் அடுத்த மனிதனை கொடுமைப்படுத்தவும், அடிமைப்படுத்தவும் மனிதன் ஒருபோதும் தயங்கவே மாட்டான்.
எனவே, எளியவர்களுக்கு வலியவர்களால் எந்த பாதிப்பும் நிகழக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர் மிகுந்த முரடர் என்றாலும், அருகில் இருப்பவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அழகான பெண் என்பதற்காக விரும்பியவர் எல்லாம் தொட்டுவிட முடியாது. இந்த கட்டுப்பாடு சமூகத்தில் நிலைத்திருப்பதற்கு சட்டமும் தண்டனையுமே காரணம்.
எளிய மனிதர்களுக்கு நம்பிக்கை தரும் இந்த அமைப்புகளில் சில தவறுகள் இருக்கலாம். மோசமான மனிதர்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமே தவிர, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்தமாக மோசம் என்று குற்றம் சாட்டக்கூடாது. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு. அவர்களிடம் இருந்து விலகி நின்றால் போதும். சட்டத்தை மதியுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
