வாக்கிங் போனால் ஹார்ட் அட்டாக் வரும்…?

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

காலையில் வாக்கிங் செல்லும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதாக நிறைய செய்திகள் வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை..?

நிறைய இதய பிரச்னைகள் காலை நேரத்தில்தான் கண்டறியப்படுகின்றன. குறிப்பாக வாக்கிங் செல்லும் நேரத்தில் ஜிம் சென்று பளு தூக்கும் நேரத்தில் ஹார்ட் அட்டாக் மரணம் ஏற்படுவதாக தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. இதையடுத்து 50 வயதைத் தொட்டவர்கள் காலையில் வாக்கிங் செல்வது பாதுகாப்பானது இல்லை என்று ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.   

உண்மையில் வாக்கிங் செல்வதும், பளு தூக்குவதும் இதய ரத்த நாள அடைப்பை ஏற்படுத்துவதில்லை. அவை ரத்த நாள அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பணியையே செய்கின்றன. மேலும், இன்சுலின் எதிர்ப்பு நிலையை சீர்செய்ய கூடியவை.

அதேநேரம், ஏற்கனவே இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு, இதயத்துக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் கொடுப்பது என்பது இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதும் உண்மை.

அதனால் கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு, கட்டுப்பாடு இல்லாத ரத்த அழுத்தம், ஏற்கனவே இதய நோய் இருந்து அதற்கு முறையாக சிகிச்சை எடுக்காதவர்கள், தன்னிச்சையாக அதிகமான அளவு உடலுக்கு ஸ்ட்ரெஸ் கொடுப்பது இதய ரத்த நாள அழற்சி நிலையை ஏற்படுத்துகின்றன.

எனவே, எல்லோருமே ரத்தத்தில் சுகர், பிரஷர் சரியான அளவில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அதோடு வருடம் ஒருமுறை ட்ரெட் மில் டெஸ்ட் எனப்படும் இதயத்துக்கு ஸ்ட்ரெஸ் கொடுத்து எடுக்கப்படும் ஈசிஜி எக்கோ ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

வயதுக்கும், அவருக்கு இருக்கும் இணை நோய்களுக்கும் ஏற்றவாறு உடல் பயிற்சி மற்றும் உழைப்பு அமைய வேண்டும். இருபது வருடங்களாக பிரஷர், சுகர் இருப்பவர்கள், அதிலும் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு, மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவர்கள் வாக்கிங் சென்றாலும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இன்னும் சிலருக்கு பிரஷர் நோயை முறையாகக் கன்டரோல் செய்யாமல் விட்டதால், இதய அறை வீக்கம் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நபர்கள் அதீத உடல் உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்னும் சில இளைஞர்கள் எப்போதும் ஜிம்மில் இருப்பார்கள். அதோடு கெமிக்கல் புரதப் பொடிகளை அளவின்றி உட்கொள்வார்கள். அதேநேரம், தங்கள் உடலில் இருக்கும் இணை நோய்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். உடலை கட்டுமஸ்தாக வைக்க வேண்டும் என்ற வேட்கையும் வெறியும் அதிகமாகி அவர்களின் கண்ணை மறைக்கும். இதனால் மரணம் சம்பவிக்கும் நிலை ஏற்படுகிறது.  

இன்னும் சிலர் முறையான உணவு பழக்கம் இல்லாமல் அதிக மாவுச்சத்து, எண்ணெய்யில் பொரித்த உணவுகள். மது புகை உள்ளிட்ட லாகிரி வஸ்துக்களை ஜாலியாக எடுத்துக்கொள்வார்கள். அதோடு இரவு நீண்ட நேரம் கண் விழித்து செல்போன், தொலைக்காட்சியில் நேரம் போக்குவார்கள். இதனால் உடலும், மனமும் அழுத்தத்தை சந்திக்கும். இதனால் இதய பாதிப்பு உண்டாகும்.

மருத்துவ உண்மை என்னவென்றால் காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்வது நல்லது. அது அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பைக் குறைக்குமே அன்றி கூட்டாது.

ஜிம் சென்று தசைகளை வலுப்படுத்துவது நல்லது என்றாலும் தங்களின் வயது, இணை நோய்கள், தங்களின் உள்ளுறுப்புகளின் செயல்பாடு குறிப்பாக இதயத்தின் நலன் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் காட்டி ஆலோசனை பெற்று உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்

வாக்கிங் சென்ற நேரத்தில் இறந்தார் என்றும்., ஜிம்மில் இறந்தார் என்றும் அவ்வப்போது சில செய்திகள் கேள்விப்படுவது உண்மை. அனால், தினமும் எத்தனை பேர் மருத்துவமனை ஐசியூக்களில் இறக்கின்றனர், எத்தனை பேர் உறங்கும் போது இறக்கின்றனர் என்பது பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

எனவே, எதிலும் வரம்பு மீறி விடாமல் இருந்தால் போதும். அது உடல்பயிற்சி என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து. போதிய அளவு மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை தரவே செய்யும். எனவே, மருத்துவ விழிப்புணர்வு என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம்.

Leave a Comment