நடை மாற்றம்
முகத்தில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் கவனிக்கிறோம். ஆனால் நடை மாறுவதை கண்டுகொள்வதே இல்லை. இதன் பின்னணி மருத்துவம் அறிவோம்.
ஒவ்வொரு நபரின் நடையும் வித்தியாசமானது. எந்த வேலையும் இல்லை என்றாலும் சிலர் வேகவேகமாக நடப்பார்கள். எத்தனை அவசரம் என்றாலும் சிலர் நிதானமாக நடை போடுவார்கள்.
முகத்தைப் பார்க்காமலே நடையை வைத்து யார் வருவது என்பதை அறிந்துகொள்ள முடியும் எனும் அளவுக்கு ஒவ்வொரு நபருக்கும் நடப்பதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். இது வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி இருக்கும்.
இந்த நடையின் ஸ்டைலை வைத்து மனிதரின் உடல்நலப் பாதிப்பு, எதிர்கால ஆரோக்கியம் ஆகியவற்றைக் கணிக்கமுடியும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, ஒருவர் வழக்கத்தை விட மிகவும் மெதுவாக நடக்கத் தொடங்கினால், அது வெறுமனே வயதானதற்கான அறிகுறி மட்டுமல்ல. சில நேரங்களில் உடல் நோய் அறிகுறி அல்லது உளவியல் பாதிப்பாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
எனவே, நடை என்பது ஒருவரின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்கிறது மருத்துவம். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவு போலவே, நடை வேகமும் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அறிகுறி. அதனால் நடை மாறுவதை ஆறாவது உயிர் அறிகுறி (Sixth Vital Sign) என்று மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள்.
முதல் ஐந்து அறிகுறிகள்
மனிதரின் உடல் ஆரோக்கியத்தை ஐந்து முக்கிய உயிர் அறிகுறிகள் மூலம் மருத்துவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஒருவரின் உடல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பற்றி முக்கிய தகவல்களை இந்த அறிகுறிகள் வழங்குகின்றன.
1. உடல் வெப்பநிலை
உடலில் காய்ச்சல், தொற்று அல்லது உடல் வெப்ப அளவில் பிரச்சினை உள்ளதா என்பதை அறிய உதவுகிறது.
2. நாடித்துடிப்பு
ஒரு நிமிடத்தில் இதயம் எத்தனை முறை துடிக்கிறது என்பதை அளவிடுகிறது. இதயத்தின் செயல்பாட்டைப் பற்றி முக்கிய தகவல் தருகிறது.
3. சுவாச விகிதம்
ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மூச்சு விடுகிறோம் என்பதை அளவிடுகிறது. நுரையீரல் மற்றும் சுவாச அமைப்பின் நிலையை மதிப்பிட உதவுகிறது.
4. ரத்த அழுத்தம்
இதயம் ரத்தத்தை உடலுக்கு அனுப்பும் அழுத்தத்தை அளவிடுகிறது. உயர் ரத்த அழுத்தம் அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தை கண்டறிய உதவுகிறது.
5. ஆக்சிஜன் செறிவு
ரத்தத்தில் எவ்வளவு ஆக்சிஜன் உள்ளது என்பதை அளவிடுகிறது. குறிப்பாக நுரையீரல் மற்றும் இதய நோய்களில் இது மிகவும் முக்கியமான அறிகுறி.
இந்த வகையில் ஒருவர் வழக்கத்தை விட மெதுவாக நடக்கத் தொடங்கினால், அதை ஆறாவது உயிர் அறிகுறி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக முதியோர் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு மருத்துவத் துறைகளில், நடை வேகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. நடை வேகம் மாற்றம் அடைவதற்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்படுகின்றன.
பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறி
திடீரென ஒரு கால் இழுத்து நடப்பது, சமநிலை இழப்பது, ஒரு பக்கம் சாய்ந்து நடப்பது போன்றவை மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கலாம். இது உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அவசர நிலை.
பார்கின்சன் நோய் தொடக்கம்
முன்பு வேகமாக நடந்தவர், திடீரென சிறிய சிறிய அடிகள் வைத்து மெதுவாக நடப்பது, கைகளை ஆட்டாமல் நடப்பது, முன்னோக்கி குனிந்து நடப்பது போன்றவை பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
நினைவாற்றல் குறைபாடு
சமீபத்திய ஆய்வுகள், நடை வேகம் குறைவதும், சமநிலை பாதிக்கப்படுவதும் சிலருக்கு நினைவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றக்கூடும் என்று கூறுகின்றன.
நீரிழிவு நோயின் நரம்புப் பாதிப்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் உணர்வு குறையும்போது, நடை மாறலாம். கால் எங்கு வைக்கிறோம் என்ற உணர்வு குறைவதால் தடுமாறி விழும் அபாயமும் அதிகரிக்கிறது.
வைட்டமின் B12 குறைபாடு
இந்த வைட்டமின் குறைந்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கால்களில் மரத்துப் போன உணர்வு, சமநிலை இழப்பு, நேராக நடக்க முடியாமை ஏற்படலாம்.
மனநலக் கோளாறு
மனச்சோர்வு உள்ளவர்கள் இயல்பை விட மெதுவாகவும், முதுகு குனிந்தும் நடக்கலாம். அதேபோல் கடுமையான பதற்றம் உள்ளவர்கள் அவசரமாக அல்லது அமைதியின்றி நடக்கலாம். ஆரம்பத்திலே நடை மாற்றத்தைக் கண்டறிந்தால் இதை சிகிச்சையால் சரிசெய்துவிட முடியும். நடை என்பது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் அறிகுறி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
