ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 528

அம்மா உணவகம் ஜெயலலிதா வெற்றிக்கு உதவியது குறித்து உளவுத்துறை அதிகாரி சைதை துரைசாமியிடம் தொடர்ந்து பேசினார்.

‘’புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. அதன்படி 2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடிந்து, 2016ம் ஆண்டு சட்டமன்றத்  தேர்தல் வந்த சமயத்தில், மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரும் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்தார்கள்.

அனைத்து மீடியாக்களும், பத்திரிகைகளும் ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆணித்தரமாக ஆருடம் கூறிவந்தன. அதனால் தேர்தலுக்கு முன்பு அடித்தட்டு மக்களிடம் நாங்கள் மிக ரகசியமாக விரிவாக ஓர் ஆய்வு மேற்கொண்டோம். இவர்களுடைய ஓட்டுதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால், ஏழை மக்களிடம் மட்டும் ஒரு சர்வே எடுத்தோம்.

பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பதையோ, தொலைக்காட்சி அல்லது சினிமா அரங்கில் அரசு கொடுக்கும் சாதனை விளம்பரங்களையோ மக்கள் பெரிதாக மதிப்பதில்லை. அதேநேரம், அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்கள் அதுகுறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அது காற்றைவிட வேகமாகப் பரவுகிறது. அதனால் அம்மா உணவகம் மக்களிடம் மாபெரும் அளவில் ஜெயலலிதா வெற்றிக்கு மெளனப் பிரசாரம் செய்தது என்றே சொல்லலாம்.

ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டம், ஏழை மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது, அதுபோல் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 16 பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம், இலவச கறவை மாடு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமத்தில் உள்ள பெண்கள், மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்திருந்தன. ஆனால், இவை எல்லாவற்றையும் விட  அம்மா உணவகத்தையே அத்தனை மக்களும் மனதாரப் பாராட்டினார்கள்.’’ என்றார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment