வாழ்க்கையில் ஒரு முறையே காதல் வரும் என்பது உலக மகா பொய். 

மந்திரச்சொல்

உண்மை போலவே தோற்றமளிக்கும் பொய்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று, காதல் ஒரு முறை மட்டுமே வரும். காதலில் தோல்வி அடைந்துவிட்டால், இனி வாழ்க்கையில் வேறு யாரையும் நேசிக்க முடியாது என்று சிலர் நம்புகிறார்கள். இது காதல் பற்றி அறியாதவர்களின் தப்புக்கணக்கு.

மனித மனம் ஒரே ஒருவரை மட்டுமே காதலிக்கும் இயந்திரம் அல்ல. அது அனுபவங்களால் மாறுகிறது, காயங்களால் கற்றுக்கொள்கிறது, காலத்தால் முதிர்ச்சி அடைகிறது. அதனால், வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காதல் வரும்.

ஆனால், முதல் காதலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அப்போது காதல் பற்றி அதிக அனுபவம் இருக்காது. ஒருவருக்குக் காத்திருப்பது, அவர் பேச்சுக்கு மகிழ்வது, சிறிய புறக்கணிப்பில் உடைந்து போவது, எதிர்காலக் கற்பனையில் மூழ்குவது போன்ற அனுபவம் மூளையில் அழுத்தமாகப் பதிகிறது.

முதல் என்பதால் அது எப்போதும் சிறந்தது என்று அர்த்தமல்ல. ஏனென்றால், கல்லூரியில் முதல் நாள், முதல் வேலை, முதல் சம்பளம், முதல் வெற்றி போன்ற அனுபவங்கள் போலவே, முதல் காதலும் நீண்ட காலம் மனதில் தங்கியிருக்கிறது. பள்ளிப் பருவத்தில் காதலை பார்ப்பதற்கும் கல்லூரி காலத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. வயது வளரும்போது காதல் பற்றிய பார்வை மாறுகிறது.

முதல் காதல் உணர்ச்சிகரமாக இருக்கும். பின்னர் வரும் காதலில் புரிதல் முக்கியமாகிறது. பின்னர் பாதுகாப்பு, மரியாதை, மன அமைதி காதலின் அடையாளமாகிறது. எனவே ஒருவரை இழந்ததால் காதலிக்கும் தகுதியை யாரும் இழப்பதில்லை. முதல் காதல் போன்று யாரையும் நான் காதலிக்க முடியாது என்று நினைக்காமல், அந்த அனுபவம் இனி கிடைக்காது என்றே புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதரை இழந்த பிறகு வாழ்க்கை முடிவதில்லை.

ஒரு உறவு முறியும்போது வேதனையாக இருக்கிறது.  பிறகு வலி குறைகிறது; அதன்பிறகு புதிய அனுபவங்கள் உருவாகின்றன. அவர் இல்லாமல் வாழமுடியாது என்ற சிந்தனை மாறி, அவர் இல்லாமல் வாழமுடியும் என்ற உண்மை புரியும்.

அதேநேரம், மீண்டும் காதலித்தால் மீண்டும் காயப்படலாம் என்ற பயம் காரணமாக சிலர் காதல் உணர்வுகளை மறைத்துவைக்கலாம். முதல் காதலில் யாரும் அதிகம் யோசிப்பதில்லை. தோல்விக்குப் பிறகு கற்றுக்கொள்கிறோம். எதை சகிக்கக் கூடாது, எல்லைகள் எது, எதற்காக சமரசம் செய்யலாம் என்றெல்லாம் தெரிந்துகொள்கிறோம். அதனால், இரண்டாவது காதல் இன்னும் அழகாக இருக்கலாம். அடுத்த காதல் அதிக அறிவுடன் இருக்கலாம்.

முதல் காதல் வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைக்கலாம். இந்த அனுபவம் மீண்டும் கிடைக்காது என்றாலும், இரண்டாவது காதல் நிம்மதியாக மூச்சுவிட வைக்கலாம். கஷ்டமான நாளில் பாதுகாப்பு தரலாம்.  காதல் என்பது நமக்காக ஒருவரை கண்டுபிடிப்பது அல்ல. இன்னொரு நபருடன் இணைந்து வாழ்வதற்கு நம்மை மாற்றிக்கொள்வது.

எனவே, வாழ்க்கையில் முடிந்த ஒவ்வொரு உறவும் தோல்வி அல்ல. சில உறவுகள் அடுத்த வாழ்க்கைப் பாடத்திற்கான ஆசிரியர்கள்.

ஒரே ஒரு உண்மையான காதல் என்ற எண்ணம் ஆபத்தானது. ஒருவரை கடந்த கால சிறைக்குள் தள்ளிவிடும். அவர்தான் என் ஒரே காதல் என்று நம்பிவிட்டால், அந்த உறவு நச்சுத்தன்மையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் போகலாம். ஒரு உறவு முடிந்த பிறகும், பல ஆண்டுகள் அந்த நினைப்பில் வாழ்ந்துகொண்டு புதிய வாழ்க்கையை நிராகரிக்கலாம்.

காதலித்த ஒருவரை மறப்பது அவமதிப்பது அல்ல. பெற்றோர் இறந்த பிறகும் வாழ்வது போல், காதல் தோல்விக்குப் பிறகும் புதிய வாழ்வைத் தேடி நகர வேண்டும். காதல் மீண்டும் வரும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும். வாழ்க்கையில் ஒருமுறைதான் காதல் வரும் என்பது ஒரு அழகான கவிதையாக இருக்கலாம். காதலை இழந்த ஒருவரின் வலியாக இருக்கலாம்.  ஆனால் அது வாழ்க்கையின் அறிவியல் உண்மை அல்ல.

ஒரு கதவு மூடப்படும்போது வாழ்க்கை முடிவதில்லை. சில நேரங்களில், அடுத்த கதவைத் திறப்பதற்காகத்தான் அந்தக் கதவு மூடப்படுகிறது.

எனவே, காதலை நம்புங்கள். காதலை போற்றுங்கள். காலம் முழுக்க காதல் வரும். துணையை மட்டுமின்றி உறவுகள், நட்புகள், இந்த உலகத்தையும் காதலியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment