மயக்கமா, குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா..?

கை கொடுக்கும் கவுன்சிலிங்

உடலில் வலி, நோய் வந்ததும் மருத்துவரைத் தேடுகிறார்கள். ஆனால் மனதில் ஏற்படும் வலி, குழப்பம், அச்சத்தை நெஞ்சுக்குள் பூட்டி வைக்கிறார்கள். சமாளிக்கலாம் என்று நம்புகிறார்கள்.

ஆனால், எல்லோராலும் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடிவதில்லை. உடலுக்கு மருத்துவர் போன்று மனதிற்குபாதுகாப்பான நபரும், கேட்கும் காதுகளும், சரியான வழிகாட்டுதலும் தேவை. இதற்கு கவுன்சிலிங் கை கொடுக்கிறது.

கவுன்சிலிங் என்றால்..?

கவுன்சிலிங் ஒருவருடைய பிரச்சினைகளுக்கு இன்ஸ்டன்ட் தீர்வு கொடுப்பதில்லை. எண்ணங்கள், உணர்வுகள், அச்சங்கள், உறவுச் சிக்கல்கள், முடிவெடுக்க முடியாத குழப்பங்களை மனநல நிபுணர் அல்லது மனவள ஆலோசகரிடம் முழு நம்பிக்கையுடன் பேசுவதுதான் கவுன்சிலிங்.

மனம் விட்டு பேசுவதே பாதி சிக்கலைக் குறைத்துவிடும். அதன்பிறகு உண்மையான சிக்கலைப் புரிந்துகொள்ளவும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரவும் முடியும்.

கவுன்சிலிங் மூலம் நேரடியாக எட்டு நன்மைகள் கிடைக்கின்றன.

  1. மனம் விட்டு பேசுதல்

கோபம், வருத்தம், பயம், குற்ற உணர்வு, தோல்வி, தனிமை. நிராகரிப்பு போன்றவற்றை யாரிடமும் சொல்லமுடியாமல் நீண்ட காலம் அடக்கி வைத்தால் மனச்சுமை அதிகரிக்கும். ஒருவரிடம் மனம் விட்டு பேசுவதால் பாரம் குறைகிறது.

  •  சிந்தனை மாற்றம்

ஒரே நேரத்தில் என்ன நடக்கும், சரியாக நடக்குமா என்று அடுத்தடுத்து கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் உண்மையா அல்லது கற்பனையா என்பதைப் புரியவைத்து எண்ணங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது கவுன்சிலிங்.

  • நேர்மறை பார்வை

யாருக்கும் என்னைப் பிடிக்காது, என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நெக்டிவ் சிந்தனையை மாற்றி, ஒவ்வொரு நபருக்கும் தனித்தன்மை, அர்த்தமுள்ள வாழ்க்கை, உறவு பலம் என்ற பாசிடிவ் பார்வையை கவுன்சுலிங் கொண்டுவருகிறது.

  • உறவுச் சிக்கல்

குடும்பம், திருமணம், காதல், நட்பு, பணியிடம் உறவுகளில் மன அழுத்தம் ஏற்படலாம். இதற்கு எல்லை வகுப்பது, எதிர்பார்ப்பு குறைப்பது, நோ சொல்வது போன்ற புரிதல் மூலம் இணக்கமான உறவை கவுன்சிலிங் வளர்க்கிறது.

  • ஆறுதல்

தங்களுக்கு மட்டுமே சிக்கல், தாங்களே பிரச்னைக்குக் காரணம் என்ற குற்றவுணர்வை கவுன்சிலிங் போக்குகிறது. பிரச்னைகள் வாழ்வில் ஒரு பகுதி என்ற புரிதல் நம்பிக்கை கொடுக்கிறது.

  • பயிற்சிகள்

ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வகையில் மூச்சுப் பயிற்சி, எல்லைகள் வகுத்தல், நோ சொல்லுதல், நேர மேலாண்மை, மகிழ்ச்சிக்கு வழிகாட்டுதல் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தை வெளியேற்றும் திறமையை வளர்க்கிறது.  

  • முடிவெடுக்கும் திறன்

பிரச்னைகளைப் புரிந்துகொள்வதும், குழப்பம் இல்லாமல், தைரியாக முடிவு எடுக்கும் மனநிலையை கவுன்சிலிங் உருவாக்குகிறது. கவுன்சிலிங் முடிவு எடுக்காது என்றாலும், முடிவெடுக்கும் திறனை வளர்க்க உதவுகிறது.

8. எதிர்கால நம்பிக்கை

இன்றைய நிலை மட்டுமின்றி, எதிர்கால பிரச்னைகளில் தப்புவதற்கும் கவுன்சிலிங் நம்பிக்கை தருகிறது. எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் சிலவற்றை மாற்ற முடியும் என்ற ஆரோக்கிய மனநிலையை உருவாக்குகிறது.

குழப்பம், மன அழுத்தம் எல்லோருக்கும் வரும் என்றாலும் சில நாட்களில் சரியாகிவிடும். நீண்ட நாட்களாக கவலை, மன அழுத்தம், தூங்க முடியாத நிலை, காரணமில்லாத அழுகை, பயம், ஆர்வமின்மை, எதிர்மறை எண்ணங்கள் நீடிக்கும்போது கவுன்சிலிங் அவசியமாகிறது. மனதுக்கும் ஓய்வு, சிகிச்சை தேவை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment