ஒரு மரத்திலிருந்து ஒரு கோடி தீக்குச்சிகள் செய்யலாம். ஒரே ஒரு தீக்குச்சியால் அந்த மரத்தை எரித்துவிடலாம்.

மந்திரச்சொல்

பல ஆண்டுகளாக உருவாக்கிய நம்பிக்கை, உறவு, மன அமைதி போன்றவை தவறான ஒரு சிறிய செயலால் சில நொடிகளில் சிதைத்துவிடும்.

இதற்கு உதாரணமே, ஒரு மரத்திலிருந்து ஒரு கோடி தீக்குச்சிகள் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு தீக்குச்சி அந்த மரத்தையே எரித்துவிடும். அதுபோல் ஒரு நெகடிவ் சிந்தனை ஒட்டுமொத்த நல்லனவற்றை அழித்துவிடும்.

இந்த உவமை மனித மனதின் இயல்பை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஒரு மரம் பல ஆண்டுகள் மழை, வெயில், காற்றைத் தாங்கி வளர்கிறது. அந்த மரத்திலிருந்து எண்ணற்ற தீக்குச்சிகள் தயாரிக்கலாம். ஆனால் அந்த ஆயிரக்கணக்கான தீக்குச்சிகளில் ஒன்று மட்டும் அந்த மரம் முழுவதையும் எரித்து சாம்பலாக்கிவிடும். வாழ்க்கையிலும் இதே விதி செயல்படுகிறது. பல ஆண்டுகளாக நாம் வளர்த்த நல்ல எண்ணங்கள், நம்பிக்கை, அன்பு, நட்பு, தன்னம்பிக்கை போன்றவற்றை ஒரே ஒரு எதிர்மறை சிந்தனை சிதைக்கக்கூடும்.

உளவியல் இதை நெகடிவிட்டி பயஸ் என்கிறது. பொதுவாக மனிதர்களின் மூளை நல்ல அனுபவங்களை விட கெட்ட அனுபவங்களையே அதிகமாக நினைவில் வைத்துக்கொள்ளும் இயல்பைக் கொண்டது. பத்து பேர் நம்மைப் பாராட்டினாலும் அதை சுலபமாக மறந்துவிடும். ஆனால், ஒரே ஒருவர் விமர்சித்தால் அந்த விமர்சனமே மனதில் நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும். காரணம், மனித மூளை ஆபத்துகளை விரைவாகக் கண்டறிந்து உயிரைக் காக்கும் வகையில் பரிணாம வளர்ச்சியில் உருவாகியுள்ளது. அந்த இயல்புதான், தேவையற்ற மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது.

ஒரு மாணவர் நன்றாகப் படிப்பவராக இருப்பார். தேர்வுக்கு முதல் நாள் யாராவது, ‘இந்த ஆண்டு கேள்வித்தாள் மிகவும் கடுமையாக இருக்குமாம்’ என்று ஒரு செய்தியைச் சொல்வார். உடனே பயந்துவிடுவார். ’என்னால் முடியாது. நான் தோல்வி அடைந்துவிடுவேன்’ என்ற நெகடிவ் சிந்தனை மனதை உலுக்குகிறது.  அந்த எண்ணம் பயத்தை உருவாக்குகிறது. பயம் கவனத்தைக் குறைக்கிறது. கவனம் குறைவதால் தெரிந்த பதில்களை எழுதவும் தடுமாறிவிடுகிறார். இங்கு சிக்கலுக்குக்  காரணம் அறிவுக் குறைவு அல்ல, ஒரு எதிர்மறை எண்ணத்தின் தாக்கம்.

குடும்ப வாழ்க்கையிலும் இதை பார்க்கலாம். பல ஆண்டுகளாக அன்பாக வாழ்ந்த தம்பதியராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு நாள் பேசும்போது தவறான வார்த்தைகள் வந்துவிழும். உடனே, ‘இவர் என்னை மதிப்பதில்லை’ என்ற எதிர்மறை எண்ணம் தோன்றிவிடும். அதன்பிறகு ஒவ்வொரு செயலையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குவார். நல்ல செயல்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். சந்தேகம் வளர்ந்தால் அன்பு சுருங்கும்; அன்பு சுருங்கினால் உறவு பலவீனமடையும்.

ஒரு தொழிலதிபர் பல தோல்விகளைத் தாண்டி நிறுவனம் உருவாக்கியிருக்கலாம். ஆனால் போட்டி நிறுவனத்தின் புத்திசாலித்தனமான ஒரு விளம்பரத்தைப் பார்த்தவுடன், ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்ற அவநம்பிக்கை வந்துவிட்டால், புதிய வாய்ப்புகளைக் கூட அவர் பார்க்க மாட்டார். உண்மையில் அவரை வீழ்த்துவது சந்தை நிலைமையல்ல; அவரது மனநிலை.

எனவே எதிர்மறை சிந்தனை தோன்றும் நேரத்திலேயே, அதை நேர்மறை சிந்தனையாக மாற்றிக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  அதாவது, ‘பிரச்னை இருந்தால் தீர்வும் இருக்கும். சாவி இல்லாமல் பூட்டுகள் தயாரிக்கப்படுவதில்லை’ என்று தைரியமாக அணுகுவது மன உறுதியைக் காட்டும்.

எனவே, வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு எதிர்மறை சிந்தனையையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஒரு தீக்குச்சியை கவனமாகக் கையாள்வது போல, எதிர்மறை எண்ணங்களையும் கவனமாகக் கையாள வேண்டும்.

வாழ்க்கையை அழிப்பது வெளியில் இருக்கும் தீ அல்ல. மனதில் உருவாகும் எதிர்மறை சிந்தனைகள்தான். அந்த தீக்குச்சியை அணைத்துவிட்டால், வாழ்க்கை என்ற மரம் பசுமையாக பூத்துக்குலுங்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment