ஒடிஸி சினிமாவால் வைரலாகும் இலியட் காவியம்

நம்மூர் ராமாயணம்

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில்  ’தி ஒடிஸி’ திரைப்படம் உலகம் முழுக்க பரபரப்பாக ஓடிவருகிறது. இந்த படம் ஹோமர் எழுதிய இலியட் என்ற காவியத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

மனைவியை கவர்ந்து சென்ற நாட்டின் அரசு மீது படையெடுத்துச் சென்று வென்ற கதையே இலியட். இதுவே நம்மூர் ராமாயணம்.

கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய ‘இலியட்’ (The Iliad) காவியத்தை சுருக்கமாகப் பார்க்கலாம்.  

பாரம்பரிய கதைகளின் அடிப்படையில் ட்ராய் போர் பூமியில் உள்ள மனிதர்களுக்கிடையில் தொடங்கவில்லை; அது தேவர்களின் விருந்து மண்டபத்தில்தான் தொடங்கியது! ஒரு திருமண விருந்திற்கு அழைக்கப்படாத ‘ஈரிஸ்’ (சண்டையின் தேவதை), கோபத்தில் ஒரு தங்க ஆப்பிளை விருந்து மண்டபத்தில் வீசினாள். அதில் “மிகவும் அழகானவளுக்கு” (To the fairest) என்று எழுதப்பட்டிருந்தது.

ஹேரா, அதீனா, அஃப்ரோடைட் ஆகிய மூன்று தேவதைகளும் “அந்த ஆப்பிள் எனக்கே சொந்தம்” என்று சண்டையிட்டனர். இதற்கான தீர்ப்பை வழங்கும் பொறுப்பு, ட்ராய் நாட்டின் இளவரசனான ‘பாரிஸ்’ என்ற இளைஞனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் அஃப்ரோடைட் (காதல் தேவதை), “என்னைத் தேர்ந்தெடுத்தால், உலகின் மிக அழகான பெண்ணை உனக்குத் தருவேன்” என்று வாக்களித்தாள். பாரிஸ் அந்த தங்க ஆப்பிளை அஃப்ரோடைட்டிற்கே கொடுத்தான். அங்கிருந்துதான் ட்ராய் நகரின் அழிவுக்கான கவுண்டவுன் தொடங்கியது!

உலகின் மிக அழகான பெண்ணாக அறியப்பட்டவள் ஸ்பார்ட்டா நாட்டின் ராணியான ‘ஹெலன்’. ஆனால் அவள் ஏற்கனவே ஸ்பார்ட்டா மன்னன் மெனிலாஸ் என்பவனின் மனைவியாவாள். ஸ்பார்ட்டாவிற்கு விருந்தாளியாக வந்த இளவரசன் பாரிஸ், ஹெலனைக் காதலித்து, அவளைத் தன்னுடன் ட்ராய் நகருக்கே இரகசியமாகக் கடத்திச் சென்றான். (அவளாகவே சென்றாள் என்றும் சில கதைகள் கூறுகின்றன).

தன் மனைவியைக் கடத்திச் சென்றதால் அவமானம் அடைந்த மெனிலாஸ், மைசீனியா நாட்டு மன்னனான தன் அண்ணன் அகமெம்னானிடம் முறையிட்டான். கிரேக்க தேசத்தின் ஒட்டுமொத்த மன்னர்களும், மாவீரர்களும் ஒன்றிணைந்தனர். ஹெலனை மீட்பதற்காகவும், ட்ராய் நகரை அழிப்பதற்காகவும் சுமார் 1,000 போர்க்கப்பல்கள் ட்ராய் நகரை நோக்கிப் புறப்பட்டன. (இதனால்தான் ஹெலனின் முகம் ‘ஆயிரம் கப்பல்களை ஏவிவிட்ட முகம் – The face that launched a thousand ships’ என்று இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகிறது).

‘இலியட்’ காவியத்தின் மையக்கருவே போர் தான்! ட்ராய் நகரின் கோட்டை மிக வலிமையானது; 10 ஆண்டுகளாகப் போர் நடந்தும் கிரேக்கர்களால் அதனுள் நுழைய முடியவில்லை. இந்தப் போரில் இரண்டு மாபெரும் ஹீரோக்கள் இருந்தனர்:

இதில் முதலாவது அகிலிஸ். கிரேக்கப் படையின் ஆகச்சிறந்த வீரன். இவனது உடலைக் எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது (குதிங்காலைத் தவிர). இவன் பாதி கடவுள், பாதி மனிதன் என்று கதையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தவன் ஹெக்டர். ட்ராய் நாட்டுப் படையின் தளபதி மற்றும் பாரிஸின் மூத்த அண்ணன். மிகச் சிறந்த வீரனும், பொறுப்பான குடும்பஸ்தனும் ஆவான்.

போரின் இடையே கிரேக்கப் படைத்தளபதி அகமெம்னானுக்கும், அகிலிஸுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது. அகிலிஸ் கோபித்துக்கொண்டு தனது கூடாரத்திற்குள் முடங்குகிறான். அகிலிஸ் களத்தில் இல்லாததால் ட்ராய் நாட்டு வீரன் ஹெக்டர் கிரேக்கப் படையை துவம்சம் செய்கிறான்.

தன் நண்பன் ‘பேட்ரோக்ளஸ்’ அகிலிஸின் கவசத்தை அணிந்து போரிட்டு ஹெக்டரால் கொல்லப்படுகிறான். இதைக் கேள்விப்பட்ட அகிலிஸ் கோபத்தின் உச்சிக்குச் செல்கிறான். களத்தில் இறங்கிய அகிலிஸ், ட்ராய் வீரன் ஹெக்டரை நேருக்கு நேர் போரிட்டுக் கொடூரமாகக் கொல்கிறான். கோபம் தீராமல் ஹெக்டரின் உடலைத் தன் தேரின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று அவமதிக்கிறான். (பின்னர் ஹெக்டரின் முதிர்ந்த தந்தை மன்னன் பிரியாம், நள்ளிரவில் அகிலிஸின் கூடாரத்திற்கு வந்து கண்ணீர் மல்கக் கெஞ்சித் தன் மகனின் உடலை வாங்கிச் செல்கிறார் – இத்துடன் இலியட் காவியம் முடிகிறது).

அடுத்தகட்டப் போரில், இளவரசன் பாரிஸ் எய்த ஒரு நச்சு அம்பு, அகிலிஸின் உடலிலேயே பலவீனமான பகுதியான அவனது ‘குதிங்காலில்’ பட்டு அகிலிஸ் மரணமடைகிறான்.

10 ஆண்டுகள் ஆகியும் கோட்டையை உடைக்க முடியாததால், போன பதிவில் நாம் பார்த்த ‘ஒடிஸியஸ்’ ஒரு மாபெரும் தந்திரம் செய்கிறான். ஒரு பிரம்மாண்டமான மரக்குதிரையைச் செய்து, அதற்குள் சிறந்த கிரேக்க வீரர்களை ஒளித்து வைத்துவிட்டு, மற்றவர்கள் தங்கள் கப்பல்களில் ஊருக்குத் திரும்புவது போலப் பின்வாங்குகிறார்கள். “கிரேக்கர்கள் பயந்து ஓடிவிட்டார்கள், இந்த மரக்குதிரை நமக்குக் கிடைத்த வெற்றிப் பரிசு” என்று நினைத்து ட்ராய் மக்கள் அதைத் தங்கள் பலமான கோட்டைக்குள் இழுத்துச் சென்றனர். நள்ளிரவில் மரக்குதிரையிலிருந்து வெளியே வந்த ஒடிஸியஸ் மற்றும் அவனது படைகள், கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட, மீண்டும் உள்ளே நுழைந்த கிரேக்கப் படை ஒட்டுமொத்த ட்ராய் நகரத்தையும் தீக்கிரையாக்கி, சுடுகாடாக மாற்றியது!

ஹோமரின் ‘இலியட்’ வெறும் போரையும், ரத்தத்தையும் மட்டும் பேசும் காவியமல்ல. அற்பமான ‘ஈகோ’வால் ஒரு மனிதனின் கோபம் (அகிலிஸ்) எப்படியெல்லாம் அழிவைத் தேடித்தரும் என்பதையும், அடுத்தவன் மனைவியின் மீது கொண்ட ஆசை (பாரிஸ்) பல நூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை (ட்ராய்) எப்படிச் சாம்பலாக்கும் என்பதையும் உலகிற்கு உணர்த்திய காலத்தை வென்ற உளவியல் காவியம்.

Leave a Comment