ஞானகுரு பதில்கள்
கேள்வி : சிலர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களே, அவர்கள் ஏன் முன்னேற்றம் அடைய முடிவதில்லை?
- சி.சரவணகுமார், பாண்டிச்சேரி.
ஞானகுரு :
முன்னேற்றம் என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது. காரும், பங்களாவும் வாங்குவது முன்னேற்றம் என்று நினைப்பவர் அதற்குத் திட்டமிட்டு உழைக்கிறார். புதிய மாற்றத்தை நோக்கி பயணம் செய்கிறார். இலக்கை அடைகிறாரோ இல்லையோ அவரது பயணமே முன்னேற்றமாகவே கருதப்படும்.
அதேநேரம், சிலர் உணவு, உடை, வீடு, செல்போன் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற முடிந்தாலே அது பெரிய வெற்றி என்று நினைக்கிறார்கள். இவர்கள் எந்த புதிய மாற்றத்துக்கும் தயாராக இருக்க மாட்டார்கள். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, அதை வாழ்நாள் முழுக்க செய்துகொண்டிருந்தால் போதும் என்று ஒரே விஷயத்தை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரை அது வெற்றியாக இருக்கலாம், நிம்மதியாக இருக்கலாம்.
எனவே, கஷ்டப்படும் ஒரு நபர் மாற்றத்தை விரும்பினால் மட்டுமே அங்கே முன்னேற்றம் இருக்கும். இருப்பதில் அவர் திருப்தி அடைந்தால் அவரும் முன்னேறிய நபர் தான். பிறர் கண்ணுக்காக முன்னேற்றம் அடைவது யாருக்கும் அவசியமில்லை. எதுவாக மாற நினைக்கிறார்களோ, அப்படியே மாறுவார்கள் என்பது என்றும் அழியாத தத்துவம்.
