மரண பயம் என்ன செய்யும்?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும் மனிதர்கள் தவறு செய்வது ஏன்..?

  • பி.குமார், சென்னை.

ஞானகுரு :

செத்த பிணத்தைப் பார்த்து வாழும் பிணங்கள் அழுகின்றன என்று வள்ளலார் மரணத்தை கிண்டல் செய்வார். மரணம் நிச்சயம்னு தெரிஞ்சாலும், நமக்கு மட்டும் இப்போதைக்கு மரணம் வராது என்ற அசட்டு நம்பிக்கை எல்லா மனிதருக்கும் இருக்கிறது. எப்படிப்பட்ட அறிவாளி என்றாலும், எத்தனை செல்வம் வைத்திருந்தாலும், உலகப் புகழ் பெற்றிருந்தாலும் மரணம் வந்தே தீரும். பிறப்பு நிகழ்ந்த நாளில் இருந்தே மனிதன் மரணத்தை நோக்கி நகர்கிறான்.

எந்த நொடியில் மரணம் நிகழும் என்பது தான் வாழ்க்கையின் புதிர். மரணம் முதுகுக்குப் பின் காத்திருக்கிறது என்று நினைப்பவர்கள் நேர்மையாகவும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும் வாழ்கிறார்கள். இப்போதைக்கு மரணம் வராது என்று குருட்டு நம்பிக்கை உள்ளவர்களே தவறு மேல் தவறு செய்கிறார்கள்,

…………………………………

கேள்வி : கல்விக்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

  • டி.சங்கீதா, திருச்சி

ஞானகுரு :

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்றெல்லாம் எல்லோரும் பள்ளியில் படித்திருப்போம். மொழி இலக்கணம், நீதிநூல் பாடல்கள், கணித சூத்திரங்கள் மூலம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களுக்கும் இப்போது அவை முழுமையாக ஞாபகம் இருக்காது. ஏனென்றால் அவை நடைமுறை வாழ்க்கைக்குத் தேவை இல்லை.

அதேநேரம், அனுபவம் என்பது கல்வெட்டு போன்றது. சின்ன வயதில் நீச்சல் படித்திருப்பார். 50 ஆண்டுகள் நீச்சல் அடிப்பதற்கு அவசியம் நேர்ந்திருக்காது என்றாலும், அதன் பிறகும் அவரால் நீச்சல் அடிக்க முடியும். எனவே, அனுபவம் மிகச்சிறந்த பாடம். ஏட்டுக் கல்வியுடன் அனுபவக் கல்வி இணையும்போது வெற்றி சுலபமாகக் கிடைக்கும்.

Leave a Comment