எக்கச்சக்கமாக உயர்ந்த கல்விக்கூடங்கள்

காமராஜர் நினைவலைகள் – 19

படிக்காத காமராஜர்தான், தமிழகத்தை படித்த மாநிலமாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டினார். அவரது காலமே தமிழகத்தில் கல்விக்குப் பொற்காலமாக அமைந்தது.

ஆரம்பப் பள்ளிப் படிப்போடு சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மேலே படிக்க முடியாமற்போன, காமராஜர்தான், தமிழ்நாட்டிலே இருந்த கோடானுகோடிப் பேர்கள் கல்வி கற்று வாழ்விலும் முன்னேற எல்லா வகையிலும் பாடுபட்டார்

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.

16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள். 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ – மாணவிகள் பகல் உணவு உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலு கூறுகிறார்.

காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86 ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள், அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.

இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ‘நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்’- என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.

தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ‘கல்விக் கண் திறந்து வைத்தவர்’ – என்று சொல்வதிலே தவறேதும் இல்லை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment