பிச்சை எடுக்கச் சித்தமாயிருக்கிறேன்

காமராஜர் நினைவலைகள் – 14

காமராஜர் பேசிய பேச்சு தமிழகம் எங்கும் மக்களிடம் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. எனவே, காமராஜர் பகல் உணவுத் திட்டத்தை அரசு திட்டமாக நிறைவேற்றுவதற்கு முன்பே, பல ஊர்களில் பொதுமக்கள் அவரது வேண்டுகோளை ஏற்று தங்கள் சொந்த பொறுப்பில் நிறைவேற்றிட முன்வந்த ஆச்சர்யமும் அப்போது நடந்தது.

காமராஜர் பள்ளியில் பகல் உணவுத் திட்டத்தை முதலில் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கினர். பகல் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காமராஜ், “நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.

என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்போதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்” என்று பேசினார்.

காமராஜரின் இந்த பேச்சு மக்களை உலுக்கியது. மதிய உணவு திட்டத்தை ஒரு வாழ்க்கை தத்துவமாக கருதினார். தமிழ்நாட்டின் செல்வந்தர்களும், வள்ளல்தன்மை குணம் படைத்தோரும் பொருளுதவி செய்தனர். காமராஜின் மதிய உணவு திட்டம் பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை வரவழைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment