காமராஜர் மனதிலிருந்து பேசிய பேச்சுகள்

காமராஜர் நினைவலைகள் – 13

காமராஜர் மதிய உணவுத் திட்டம், சீருடைத் திட்டம், உயர்கல்வி போன்றவை கொண்டுவருகையில் பல்வேறு இடையூறுகள் உருவாகின. ஆனால், எல்லாவற்றையும் மக்களிடம் வெளிப்படையாகப் பேசினார் காமராஜர்.

“நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன? அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன?.

நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மத்தியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று? அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம்.

ஒரு சட்டை வாங்க பணமில்லை. அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா? அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா? இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா? நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெழுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா? இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் மதிய உணவுத் திட்டம் பற்றி காமராஜர், ‘’அத்தனைபேரும் படிக்கணும், வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படி படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவிற்க்கு சொந்தக்காரன். ஏழைகக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதை தள்ளி போட முடியுமா என்ன?

இது மிக முக்கியம் என்பதால் உடனடியாக தொடங்கி விடணும். பணத்திற்க்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உண்விற்கென்று தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கனும். அவர்களுக்குந்தான் தேசம்” என்றார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment