அதிகம் தூங்கினால் ஏஜ் கேப்ஸ்
தினமும் 8 மணி நேரம் கட்டாயத் தூக்கம் மருத்துவரீதியான கட்டுக்கதையா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒரு மனிதரின் ஆரோக்கிய வாழ்வுக்குத் துல்லியமான தூக்க நேரத்தைக் குவாண்டம் அளவிலான தரவுகளுடன் சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற ‘யுகே பயோபேங்க்’ (UK Biobank) அமைப்பில் உள்ள சுமார் 5 லட்சம் மனிதர்களின் உடல்நலத் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வில், மிகக் குறைவாகத் தூங்குவது உடலுக்கு எவ்வளவு தீமை செய்கிறதோ, அதே போன்று, அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் மனித உடலின் உள் உறுப்புகளுக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பது உறுதியாகியுள்ளது;
குறிப்பாக, ஒரு மனிதனின் இதயம், மூளை, நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட 23 முக்கிய உள் உறுப்பு மண்டலங்கள் அனைத்தும் தங்களது இளமையையும் செயல்திறனையும் தக்க வைத்துக் கொள்ள 6.4 மணி நேரம் முதல் 7.8 மணி நேரம் வரையிலான தூக்கம் மட்டுமே போதும் என கண்டறியப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு தூக்கம்
பொதுவாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் 7 மணி முதல் 9 மணி வரையிலான தூக்கம் தேவைப்படுகிறது. மற்ற வயதினர் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவது சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
அதாவது ஏதேனும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அதிகம் தூங்குவது பிரச்சினை அல்ல. கடுமையான வேலை, பயணம், உடல் சோர்வு அல்லது தூக்கக் குறைபாட்டை ஈடுகட்டுவதற்காக உடல் கூடுதல் ஓய்வை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், தினமும் 8 மணி நேரம் தூங்குவது, எழுந்த பிறகும் சோர்வாக இருப்பது, பகல் நேரத்திலும் தூக்கம் வருவது, வேலை, படிப்பு, சமூக வாழ்க்கை பாதிக்கப்படுவது போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படலாம்.
அதிக தூக்கம் காரணங்கள்
* சிலருக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை. அதாவது தூக்கத்தின் தரம் மோசமாக இருக்கும். குறிப்பாக தூக்கத்தில் ஸ்லீப் அப்னியா எனப்படும் சுவாசம் தடைபடும் பிரச்சினைஇருந்தால், அவர்கள் நீண்ட நேரம் தூங்கினாலும் புத்துணர்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
* மனச்சோர்வு உள்ளவர்களுக்கும் அதிக தூக்கம் காணப்படலாம். சிலர் தங்களின் மன வேதனையிலிருந்து தப்பிக்க தூக்கத்தை ஒரு பாதுகாப்பான இடமாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
* தைராய்டு சுரப்பி குறைவாக செயல்பட்டால் உடல் இயக்கங்கள் மந்தமடைந்து அதிக தூக்கம், சோர்வு, எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படலாம்.
* சர்க்கரை நோய், இரத்த சோகை, சில நரம்பியல் நோய்கள் ஆகியவை அதிக தூக்கத்தை ஏற்படுத்தலாம்.
* சில ஒவ்வாமை மருந்துகள், மன அழுத்த மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் தூக்கத்தை அதிகரிக்கக்கூடும்.
அதிக தூக்கம் பாதிப்புகள்
தொடர்ந்து மிக அதிக நேரம் தூங்குபவர்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டாகிறது. அதோடு நீரிழிவு அபாயம், இதய நோய் அபாயம், தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, உடல் சுறுசுறுப்பு குறைதல் போன்ற பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
எனவே தினமும் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவது, தூங்கிய பிறகும் சோர்வு நீங்காதது, குறட்டை மற்றும் மூச்சுத்திணறல், திடீர் எடை மாற்றங்கள், மனச்சோர்வு அறிகுறிகள், வேலை அல்லது படிப்பில் கவனம் செலுத்த முடியாமை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
அமெரிக்காவின் சிடிசி அமைப்பின் அறிக்கையின்படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் போதிய தூக்கமின்றித் தவித்து வரும் வேளையில், 8 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தூங்கும் 10 சதவீத மக்களின் உடலானது, அவர்களின் உண்மையான வயதைவிட அதிவேகமாக உயிரியல் ரீதியான முதுமையை எட்டுகிறது என்பது ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.
அதாவது, அளவுக்கு அதிகமான தூக்கம் உடலின் உள் உறுப்புகளை விரைவாக வயோதிக நிலைக்குத் தள்ளும் ‘ஏஜ் கேப்ஸ்’ என்ற விளைவை ஏற்படுத்துகிறது. நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலம் முதல் உடலின் உள் உறுப்புகள் வரை அனைத்தும் மிகச் சீராகச் செயல்படுவதற்கு துல்லியமான, போதுமான தூக்கத்தை முறைப்படி கடைப்பிடிப்பது அவசியம்.
அதிகம் தூங்குவது எப்போதும் ஆபத்தானது அல்ல. ஆனால், அது உடலின் ஒரு எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம். உடல் கூடுதல் ஓய்வைக் கேட்கிறதா, அல்லது ஏதேனும் நோய் பின்னணியில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்திற்கு குறைவான தூக்கமும் சரியல்ல; அதிகமான தூக்கமும் சரியல்ல. சரியான அளவு, சரியான தரமான தூக்கமே ஆரோக்கியத்தின் அடித்தளம்.
