ஸ்மார்ட் டாட்டூ குத்தியாச்சா..?

நோய் டிடெக்டர்

மருத்துவத் துறை நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிச் செல்கிறது என்பதற்கு உதாரணமாக அறிமுகமாகியுள்ளது, ஸ்மார்ட் டாட்டூ.

மருத்துவத் துறையில் தினமும் புதுப்புது ஆய்வு முடிவுகள் வெளியாகின்றன. அதன் அடிப்படையில் பல்வேறு சாதனங்கள் அறிமுகமாகின்றன. அப்படி ஒரு புதுமையான கண்டுபிடிப்பை அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதுதான், ஸ்மார்ட் டாட்டூ அல்லது இ-டாட்டூ எனப்படும் புதிய தொழில்நுட்பம்.

டாட்டூ என்றதும் பச்சை குத்துவது என்று நினைக்கலாம். இது வழக்கமான பச்சைக் குத்துதல் இல்லை. டாட்டூ போன்று தோல் மீது ஒட்டப்படும் மிக மெல்லிய, நெகிழ்வான மின்னணு சென்சார். மனிதர்களின் உடலில் நிகழும் பல உயிரியல் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய இந்த டாட்டூ உதவுகிறது.

சென்சார் ரீடிங்

ஆட்கள் நடமாட்டத்தை சென்சார் மூலம் கண்டுபிடிப்பது போன்று உடலுக்குள் நோய் நடமாட்டத்தை இந்த ஸ்மார்ட் டாட்டூ கண்டுபிடிக்கிறது. இந்த டாட்டூவில் மிகச் சிறிய சென்சார்கள் தோலுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, வியர்வையில் உள்ள வேதிப்பொருட்கள், சுவாச மாற்றம், தசைகளின் மின்செயல்பாடு, மூளையின் மின்சிக்னல்கள் போன்றவை தொடர்ந்து அளவிடப்படுகின்றன.

இப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் மொபைல் அல்லது கணினிக்கு அனுப்பப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த முடிவுகள் மூலம் பல்வேறு நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

1. இதய நோய்கள்

இதயத் துடிப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்கள், இதய தசைகளின் செயல்பாடு, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் போன்றவை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

2. நீரிழிவு நோய்

ஸ்மார்ட் டாட்டூ வியர்வையில் உள்ள குளுக்கோஸ் அளவை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரத்தத்தை எடுக்காமல் சர்க்கரை அளவைக் கண்காணிக்க முடியும். எனவே, சிறிய மாற்றத்தையும் முன்கூட்டியே கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.  

3. தொற்றுநோய்கள்

உடல் வெப்பநிலை, சுவாச வேகம், ஆக்சிஜன் அளவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து உடலில் ஏதேனும் நோய்த் தொற்று தாக்கியிருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிய முடியும்.

4. தசை மற்றும் நரம்பு பிரச்சினைகள்

தசைகளின் இ.எம்.ஜி. எனப்படும் மின்செயல்பாட்டை தொடர்ந்து அளவிடுவதன் மூலம் தசை சோர்வு, நரம்பு செயல்பாட்டு குறைபாடுகள் போன்றவற்றை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய முடியும்.

5. மனஅழுத்தம்

நெற்றியில் ஒட்டப்படும் டாட்டூ சாதனங்கள் மூளை அலைகள் மற்றும் கண் அசைவுகளை கண்காணித்து மனஅழுத்தம் அல்லது அதிக வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை மதிப்பிட முடியும். ஒருவர் அளவுக்கு மீறி வேலை செய்வதால் உருவாகும் களைப்பு, சோர்வுகளைக் கணக்கிட முடியும். அதேபோல் கோபம், சோகம் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தையும் அறிந்து தெரிவிக்கும். இதன் மூலம் தீர்வு கண்டறிந்து, மன அழுத்தத்திலிருந்து ஒருவரால் எளிதில் வெளியே வர முடியும்.

மருத்துவத்தில் பொதுவாக நோய் வந்த பிறகுதான் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் டாட்டூ தொழில்நுட்பம் மூலம் நோய் வந்த பிறகு சிகிச்சை என்ற முறையிலிருந்து நோய் வருவதற்கு முன் எச்சரிக்கை என்ற முறை கையாளப்படுகிறது. எதிர்காலத்தில் புற்றுநோய், சிறுநீரகச் சிக்கல்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிவது சிகிச்சையை எளிமையாக்கிவிடும்.

ஸ்மார்ட் டாட்டூ இப்போது ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் மட்டுமே உள்ளது. எனவே, இன்றைய சூழலில் எல்லா நோய்களையும் கண்டறிய முடியாது. அதேபோல் மருத்துவரின் நேரடிப் பரிசோதனைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது என்றாலும், சென்சார்களின் துல்லியம் மற்றும் நீண்டகால பயன்பாடு அதிகரிக்கும்போது, இது மருத்துவப் புரட்சியாக மாறிவிடலாம்.

எதிர்காலத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது என்பதற்குப் பதிலாக உடல் தன்னைத் தானே கண்காணிக்கும் நிலையை உருவாக்கக்கூடிய கண்டுபிடிப்பாக ஸ்மார்ட் டாட்டூ இருக்கிறது.

உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், ரத்த அழுத்தம் அதிகரித்தால் டாட்டூவின் நிறம் மாறி எச்சரிக்கை தரும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தேவையான மருத்துவ நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பமும் மருத்துவமும் இணைந்து மனிதர்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்கப்போகிறது.  

Leave a Comment