இட்லி விற்பது அதிகாரிகள் வேலையா..?

என்ன செய்தார் சைதை துரைசாமி – 509

முதல்வர் ஜெயலலிதா மலிவு விலை உணவகத்திற்கு அனுமதி கொடுத்தபிறகும் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.

தலைமைச் செயலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் மேயர் சைதை துரைசாமியிடம் நேரடியாகவே பேசினார். ’’மலிவு விலை உணவகம் ஆயிரம் இடத்தில் தொடங்கி நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு  எவ்வளவு பணம் செலவாகும்,  எத்தனை ஆட்கள் நியமனம் செய்யவேண்டும், பொருட்கள் எங்கிருந்து, எப்படி வாங்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுவதே பெரிய வேலை. அதைவிட, இதை நடத்துவதற்கு பணம் எங்கிருந்து வரும்?

அதிகாரிகள் எல்லோரும் இட்லி விற்பதற்குத்தான் படிச்சுட்டு வந்திருக்கோமா..? இத்தனை பெரிய திட்டம் என்றால் படிப்படியாக யோசித்து, நிதானமாகவே செயல்படுத்த வேண்டும். அதனால், இன்னமும் லேட் ஆகத்தான் செய்யும். அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்காதீர்கள்’’ என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.

இதைக் கேட்டு சைதை துரைசாமி மனம் உடைந்துபோனார். அந்த நேரம் இன்னொரு அதிகாரி அவருக்கு ஆறுதல் கூறினார். ‘’காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது வருவாய்த்துறை செயலர், ‘இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. மாணவர்கள் வந்து சேர்வார்கள் என்பது உறுதியில்லை. உணவுப் பொருள் கொள்முதலில் ஊழல் நடக்கும், ஆசிரியர்கள் உணவு சாப்பிடுவார்கள். இதற்கெல்லாம் செலவழிக்க பணமே இல்லை’ என்று கை விரித்தார்.

அதைக் கேட்டு காமராஜர் அசரவில்லை. ‘மதிய உணவுத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். தேவை என்றால் அதற்காக பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்” என்று உறுதி காட்டியபிறகே அதிகாரிகள் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதனால், அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்’’ என்று ஊக்கம் கொடுத்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment