பெல் நிறுவனத்தில் நினைத்ததை முடித்தவர்

காமராஜர் நினைவலைகள் – 9

தமிழகத்தின் வளர்ச்சி கல்வி, விவசாயத்தால் மட்டுமே சாத்தியமில்லை என்பதை முதல்வராக இருந்த காமராஜர் உணர்ந்தே இருந்தார். அதனால், பெரிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைய வேண்டும் என்று விரும்பினார். வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் துறையே மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதை அழுத்தமாக நம்பினார்.

நேரு கொடுத்த தொழில்

அன்றைய காலகட்டத்தில் கனரக தொழில்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. எனவே காமராஜர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்து தமிழகத்தில் தொழில்கள் தொடங்கவேண்டிய அவசியத்தை உணர்த்தினார். அதன்படி, கனரக கொதிகலன் தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ்.

மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக் நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்து வசதிகள் இணைந்த இடத்தை தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் சோர்ந்துபோய், வேறு மாநிலம் செல்ல முடிவெடுத்தனர்

சுட்டிக்காட்டிய இடம்

இதைக் கேள்விப்பட்ட காமராஜர் உடனே செக் நாட்டு தொழில் முனைவோர்களையும், அதிகாரிகளையும் அழைத்து விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடம் இல்லை என்றனர்.

தமிழகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்தவர் காமராஜர். எனவே, ’’காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறது, அந்த இடத்தைக் காட்டுங்கள்’ என்று உத்தரவு போட்டார்.

அதன்படி அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாகத் தென்பட்டது. அங்கு உருவாகி இன்று புகழ்பெற்று விளங்குவதுதான் பெல் என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்.

இதுதான், காமராஜரின் சாதுர்யம். நினைத்தனை முடிப்பவர். தான் கஷ்டப்பட்டு அனுமதி பெற்றுவந்த நிறுவனம் எந்த காரணம் கொண்டும் வேறு ஒரு மாநிலத்துக்குப் போய்விடக் கூடாது என்று காட்டிய மன உறுதியே, இன்றைய தொழில் புரட்சிக்கு அடித்தளம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment