வியக்க வைக்கும் பரம்பிக்குளம் அணை

காமராஜர் நினைவலைகள் – 8

காமராஜரின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் போற்றப்படுகிறது, பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம். தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றான இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்கு பார்வையும் உறுதியுமே முக்கியமான காரணங்கள்.

வீணான கடல்நீர்

1950களில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைவாக இருந்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை காமராஜர் கவனித்தார்.

தமிழகத்தின் மேற்கெல்லையில் அமைந்த சிற்றூர் ஆனைமலை. உயர்ந்து செல்லும் மலைப் பகுதியில் சென்றால் கரிமலை, ஒரு கொம்பன்மலை, சுங்கமலை, பரம்பிக்குளம் மலை இவற்றிடையே பொழியும் மழை நீர் பரம்பிக்குளம் ஏரியாக உருவெடுத்து நில அமைப்பு காரணமாக கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கேரளாவில் புகுந்து கடலில் கலந்து கொண்டிருந்தது.

கடலில் வீணாகக் கலக்கும் நீரை, வறட்சியால் தவிக்கும் தமிழக நிலங்களுக்கு ஏன் கொண்டு வரக்கூடாது? என்ற காமராஜரின் சிந்தனையே பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்திற்கு விதையாக அமைந்தது.

1954-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர், பொதுப்பணித் துறை பொறியாளர்களிடம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். பல ஆறுகளை இணைத்து அணைகள், சுரங்கங்கள், கால்வாய்கள் மூலம் நீரை தமிழகத்திற்கு மாற்றும் விரிவான திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவரிப்பள்ளம் போன்ற ஆறுகளின் நீரை சேமித்து, ஆழியாறு உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு மாற்றும் யோசனை இடம்பெற்றது.

கேரளத்துடன் சவால்

1956-ல் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு, திட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் புதிய கேரள மாநிலத்துக்குள் சென்றன. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த இரண்டு மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமானது.

இதை உணர்ந்த காமராஜர் முதலில் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கேரள அரசுடன் அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். இரு மாநிலங்களுக்கும் பயன் தரும் திட்டமாக” இதை விளக்கினார்.

காமராஜரின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் கோப்புகளில் மட்டும் கையெழுத்திடும் தலைவராக இருக்காமல் பொறியாளர்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்து தெளிவாக விவாதித்தார். தண்ணீர் பாயும் மலைமுகடுகளின் அமைப்பை ஆராய்ந்தனர். மலையைக் குடைந்து மேற்கே ஓடும் நீரைக் கிழக்கு முகமாகத் திருப்பிவிடலாம். ஆனால் வரும் நீருக்கு கொள்ளிடம் வேண்டும் என்பதால் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தனர். பொள்ளாச்சி நகருக்கு தென்பால் வால்பாறை மலையில் அடிவாரத்தில் இயற்கையன்னை அமைத்திருந்த ஆழியாற்றிலே நீரை சங்கமித்துவிட முடிவெடுத்தனர்.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலேயே திட்டத்தின் அடிப்படை வடிவமைப்பு, ஆய்வுகள் மற்றும் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் பெருமளவில் நிறைவடைந்தன. பின்னர் 1970ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கிடையே பரம்பிக்குளம்–ஆழியாறு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் திட்டத்தின் முழு செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன.

பசுமைப் புரட்சி

இந்தத் திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதோடு குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல பயிர்கள் வளமாக விளைகின்றன. வறட்சிப் பகுதிகள் பல பசுமை நிலங்களாக மாறியுள்ளன.

தமிழகத்து நீர், நிலவமைப்பின் காரணமாக மேற்கே ஓடி வீணாகக் கூடாது. இந்த நீர் முழுமையும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட வேண்டும் என்று அத்துறை நிபுணர்களை திட்டமிடச்சொன்னார் காமராஜ். அன்றைய கேரள அரசோடும் சகோதரத்துவ உணர்வோடு பேச்சுவார்த்தை நடத்தினார், வெற்றி பெற்றார்.

பரம்பிக்குளம் – ஆழியார் திட்டம் இன்று வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டும் வகையில் புகழ்பெற்று விளங்குகிறது என்றால் அதற்கு காமராஜரின் மன உறுதியே காரணம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment