அம்மா உணவகத்திற்கு விதை போட்டவர் எம்.ஜி.ஆர்.

என்ன செய்தார் சைதை துரைசாமி – 501

சின்ன வயதில் இருந்தே வறுமை, பசி கொடுமையை முழுமையாக அனுபவித்து வளர்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதனால்தான், பசி இல்லாத உலகம் படைப்பதற்கு கனவு கண்டார். அந்த சிந்தனையை தன்னுடைய சினிமாவிலும் வெளிப்படுத்தினார்.

 ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின்  அறிமுகக் காட்சியில், ‘வேலை கொடு’, ‘சோறு போடு’, ‘உணவு கொடு’, ‘மன்னர் ஆட்சி ஒழிக’ என்று மக்கள் புரட்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமையேற்று ஊர்வலம் நடத்துவார். மக்களுக்கு பசி தீர்க்கும் வகையில் உணவு தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை படத்தில் அழுத்தமாக சித்தரித்திருப்பார்.

சினிமாவில் உறுதி கொடுத்ததை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், சாதித்துக் காட்டினார். பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்றாலும், அது எல்லோருடைய பசியையும் தீர்க்கவில்லை. மதிய உணவுத் திட்டத்தில் பள்ளி நாட்களில் மட்டும், அதுவும் வகுப்பில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே உணவு வாங்கப்பட்டது.

இந்த குறைகளை நீக்கி மதிய உணவுத் திட்டத்தை மகத்தான திட்டமாக மாற்றியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.  அனைத்து நாட்களும்  கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, 2  வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

வளரும் குழந்தைகளுக்கு உணவில் அனைத்து சத்துக்களும் கிடைக்கவேண்டும் என்பதால்  மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக  மேம்படுத்தினார். இந்த சத்துணவுத் திட்டத்தால் தமிழகத்தில் படிப்பவர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.

இந்த மாபெரும் தலைவர்களைப் போன்று தானும் ஏதேனும் ஒரு வகையில் ஏழை மக்களின் பசி தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சைதை துரைசாமி. மனமிருந்தார் மார்க்கம் உண்டு என்பார்கள். அப்படியொரு புதிய சிந்தனை சைதை துரைசாமிக்கு உதித்தது.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment