மந்திரச்சொல்
குழந்தை போன்று எவ்விதமான மன அழுத்தங்களும் இல்லாமல் காலையில் கண் விழிப்பதும், இரவு படுக்கையில் படுத்தவுடன் நிம்மதியாகத் உறங்குவதும் மகிழ்ச்சியான சமநிலை வாழ்க்கை.
பெரும் செல்வந்தர் ஒருவர் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என அதிக பணம் கடன் வாங்கினாலும், அது மூளையில் தொடர்ச்சியான மன அழுத்தத்தை உருவாக்கும். அதனால் தூக்கமின்மை, கோபம், பயம், தன்னம்பிக்கை குறைவு போன்ற பல பிரச்சினைகள் உருவாகும். அதனால் கடன் இல்லாத வாழ்க்கை என்பது பணமில்லாத வறுமை அல்ல; மனஅழுத்தமில்லாத செல்வம்.
அதேபோல், யாரிடமும் கோபம், வெறுப்பு, அச்சம் இல்லாதபோது எல்லோரையும் பார்த்து சிரிக்க முடிகிறது. மனம் மிகவும் லேசாகிறது. பகை மனதில் அதிக நேரம் தங்கும்போது, அது மற்றவரை விட நம்மையே அதிகமாக சோர்வடையச் செய்கிறது. ஏனெனில் மூளை எப்போதும் எச்சரிக்கை நிலையில் இயங்கத் தொடங்குகிறது. அதனால் அமைதி குலைகிறது. பகையற்ற மனம் என்பது பாதுகாப்பான மனநிலை.
நோய் இல்லாத வாழ்க்கையே மிகப்பெரிய செல்வம். உடல் நலம் பாதிக்கப்படும் போது தான், பணத்தின் எல்லை தெரியவருகிறது. ஆரோக்கியம் குறையும்போது, சின்னச்சின்ன மகிழ்ச்சிகளைக் கூட அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமும் மனநிலையும் நேரடியாக தொடர்புடையவை. உடல் நலமாக இருக்கும் போது மனதில் நம்பிக்கை, உற்சாகம், எதிர்கால நம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றன.
கடன் இல்லாமை, பகை இல்லாமை, நோய் இல்லாமை ஆகிய மூன்றும் மனிதருக்கு உள்ளார்ந்த பாதுகாப்பு உணர்வு அளிக்கின்றன. இந்த பாதுகாப்பு உணர்வே உண்மையான செல்வத்தின் அடித்தளம். ஏனெனில் பணம், புகழ் அடைந்தவர்களின் அடுத்தகட்ட தேடுதல் நிம்மதியாகவே இருக்கிறது. அதனை இப்போதே அடைவது மிகச்சிறப்பு.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
