தந்தை என்றால் வேர்

மனம்விட்டுப் பேசுங்கள்

ஒரு மரம் செழிப்பாக, பச்சைபசேல் என காட்சியளிக்கிறது என்றால், அந்த நிலத்துக்குக் கீழே வேர்கள் நன்றாக ஆழப் பதிந்து போதிய தண்ணீரை கொண்டுவந்து சேர்ப்பதாக அர்த்தம். அதனாலே மரங்கள் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன. ஆனால், இத்தனைக்கும் காரணமான வேர்கள் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை. அப்படித்தான் ஒரு குடும்பத்தின் வெற்றிக்கு, கண்ணுக்குத் தெரியாத காரணமாக இருக்கிறார் தந்தை.

வேர் என்பது மரத்தின் அடிப்பகுதி, ஆனால் அதுவே மரத்தின் உயிர்நாடி. பிள்ளைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு தந்தையின் வியர்வை இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஒவ்வொரு தந்தையும், தன் குழந்தைக்கு தன்னால் முடிந்த அத்தனை நன்மைகளையும் அளித்துவிட ஆசைப்படுகிறார். பிள்ளையின் முன்னேற்றம் தந்தையின் தியாகத்தின் வழியாகவே எழுதப்படுகிறது.

இதையே ஒரு பாரசீகக் கவிஞன், ‘‘என் தந்தை இருக்கும்போது எதையும் நான் இழந்ததாய் தெரியவில்லை; தந்தையை இழந்தபோது எதுவும் உடனிருப்பதாய் தெரியவில்லை’ என்று நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிறார்.

இந்த வார்த்தைகளில்தான் எத்தனை உண்மை.

தந்தையின் நிழலில் வளர்ந்த பிள்ளைகள், அவர்களை இழந்தபின்புதான் தந்தையின் அருமையை, ஆளுமையை உணர்கிறார்கள். உயிருடன் இருக்கும்போதே தந்தையைக் கொண்டாடுங்கள். அவர்களின் இளமைக்காலக் கதைகள், போராட்டங்கள் குறித்துக் கேளுங்கள். இது இருவருக்குமிடையே உள்ள தலைமுறை இடைவெளியைக் குறைக்கும்.  தந்தையர் தினத்தில் அவரை நினைவுகூர்ந்து மதிப்பளியுங்கள்.

சில அப்பாக்கள் கடுமையாக நடந்திருக்கலாம். நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாம். ஆனாலும், அவர் வாழ்க்கையின் திசைகாட்டி. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே தந்தையின் சொற்கள் கசப்பாக இருந்தன என்பதை விட, அக்கறையாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தந்தை கடவுள் அல்ல, அதையும் தாண்டி உயர்வானவர்.

Leave a Comment