காமம் கண்களை மறைத்துவிடும்.
ஒரு தகாத உறவு, மிகப்பெரிய குற்றத்துக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பதற்கு சமீபத்திய உதாரணம், கேரளாவைச் சேர்ந்த அர்ஷித் என்ற சிறுவனின் குரூர மரணம்.
தன் 18 மாதக் குழந்தை அர்ஷித்தின் தொண்டையில் உணவு சிக்கிவிட்டது என்று கேரள மாநிலம், நெடுமங்காடு மருத்துவமனைக்குப் போயிருக்கிறான் அக்ஷர். பிள்ளை இறந்துவிட்டது என்றாலும் மருத்துவர்கள் சந்தேகப்பட்டு உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.
குழந்தையின் தலை எலும்பு உடைந்திருக்கிறது. உடல் முழுக்க 51 காயங்கள். உள்ளங்கால்களில் சிகரெட் சூடு தழும்புகள். கொடுமையான சித்ரவதையினால் அர்ஷித் கொல்லப்பட்டது அம்பலமானதும் தாய் அகிலாவும், அஷ்கரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அகிலாவுக்கு அஷ்கருடன் கள்ளத் தொடர்பு வந்திருக்கிறது. உல்லாசத்துக்கு தொந்தரவாக இருந்த அர்ஷித்தை இரண்டு பேரும் சித்ரவதை செய்து சைகோ போன்று இன்பம் அடைந்திருக்கிறார்கள்.
மாவுக்கட்டு சிரிப்பு
இரண்டு கைகளிலும் மாவுக்கட்டுடன் இதே அர்ஷத் வீடியோ சமீபத்தில் வைரலானது. சிறுவன் கையில் மாவுக்கட்டைப் பார்த்து அதிர்ந்து வீடியோ எடுத்தவர்களிடம், சைக்கிளிலிருந்து விழுந்த காயம் என்று அகிலா சிரித்திருக்கிறாள்.
தவறான உறவும், காம ஆசையும் எந்த கொடூரமும் செய்யத் துணியும் மிருகமாக மனிதரை மாற்றிவிடும். எனவே தவறான உறவுகளில் அதிக விழிப்புணர்வு தேவை.
இந்த கொடூரத்தை சகிக்க முடியாத பொதுமக்கள், கைது செய்யப்பட்ட அஷ்கரை போலீஸ் காவலை மீறி தாக்கியிருக்கிறார்கள். ஆனால், இது தீர்வு அல்ல. இதுபோன்ற தவறு நடப்பது தெரிந்தால் அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டியது சமூகப் பொறுப்பு.
துயரத்தின் முடிவு
வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னதாகவே, சிறுவன் கொடூரமான சித்ரவதைக்குப் பலியாகி உயிரிழந்திருக்கிறான். அந்தச் சிறுவனின் இறுதிப் பயணம் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றது மட்டுமே இந்த சம்பவத்தில் ஆறுதலான தகவல். இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
குழந்தையின் தந்தையின் கல்லறைக்கு அருகில் அந்தச் சிறுவன் புதைக்கப்பட்டுள்ளான். இனி, தந்தையின் பாதுகாப்பில் இருப்பான்.
முதல் கணவன் இறந்த பிறகு மீண்டும் ஒரு துணை தேடியது அகிலாவின் குற்றம் அல்ல. ஆனால், அந்த ஆண் எப்படிப்பட்டவன் என்று அறியாமல் அவனுடன் தகாத உறவு கொண்டதும், அவன் குழந்தையை சித்ரவதை செய்கிறான் என்பதை அறிந்தும், உடந்தையாக இருந்ததும் கொடூரத்திலும் கொடூரம்.
காமம் கண்களை மட்டுமின்றி மூளையையும் மழுங்கடித்துவிடும். எனவே, தகாத உறவில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
