வீட்டு தங்கத்துக்கு ஆபத்து!
பிரதமர் நரேந்திரமோடி தங்கம், பெட்ரோல் குறித்து சில அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். இதன் அர்த்தம், தங்கத்தில் மக்கள் முதலீடு செய்யக்கூடாது, மக்கள் சேமிப்பு முழுவதும் தங்கமாக மாற்றிவிடக் கூடாது என்பதால் அப்படி கூறியிருக்கிறார்.
தங்கம் என்றால் பாதுகாப்பு
இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல; பாதுகாப்பு, மரபு, மதிப்பு, அவசர நிதி என்று பல வகையில் உதவுகிறது. அதனாலே ஆபத்துக்கு உதவும் என்று வாங்கிக் குவிக்கிறார்கள். அதேநேரம், ஒரு நாட்டின் பொருளாதாரப் பார்வையில், அதிக அளவில் தங்கம் வாங்குவது சில சிக்கல்களையும் உருவாக்குகிறது.
பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மக்கள் அதிகமாக தங்கம் வாங்கினால் வெளிநாட்டுக்கு அதிக டாலர் செல்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் அழுத்தம் உருவாகிறது
ஒருவர் வங்கியில் பணம் வைத்தால் அது தொழில், விவசாயம், வீட்டு கடன் போன்றவற்றுக்கு சுழற்சியில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதே பணம் தங்கமாக லாக்கரில் கிடந்தால், அது நாட்டின் பொருளாதார சுழற்சிக்கு உதவாது.
தங்கம் வாங்குவது லாபமா?
உலகளவில் போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், பங்குச்சந்தை அதிர்வு போன்ற சூழ்நிலைகளில் தங்கம் பொதுவாக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை விழும்போது கூட தங்கம் நிலைத்து நிற்கும் வாய்ப்பு அதிகம். அதனால் குடும்பத்தின் நீண்டகால பாதுகாப்பு சேமிப்பாக 10% முதல் 15% வரை தங்கத்தில் வைத்திருப்பது நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் நடைமுறை.
ஆனால், இன்று வாங்கி நாளை அதிக விலையில் விற்கலாம் என்ற எண்ணத்தில் தங்கம் வாங்குவது ஆபத்தானது. ஏனென்றால் தங்க விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்திருக்கிறது, சர்வதேச சந்தை மாற்றங்கள் திடீர் வீழ்ச்சி தரலாம். நகையாக வாங்கினால் சேதாரம், மேக்கிங் சார்ஜஸ் போன்றவை இழப்பாகும்
ஒரு குடும்பம் 5 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால், மறுநாள் அதை விற்கும்போது உடனே முழு தொகையும் திரும்ப கிடைப்பதில்லை. அதனால் நகை மற்றும் முதலீட்டு தங்கம் இரண்டும் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சரியான முதலீடு
பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான விதி இருக்கிறது. அதாவது, எல்லா முட்டைகளையும் ஒரே கூண்டில் வைக்காதீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், முழு பணத்தையும் தங்கத்தில் போடக்கூடாது. அதேபோல் முழுவதையும் பங்குச்சந்தையிலும் வைக்கக்கூடாது.
சரியான நிதி நிர்வாகம் என்பது சிறிது தங்கம், சிறிது வங்கி சேமிப்பு, சிறிது மியூச்சிவல் ஃபண்ட், அவசர நிதி, காப்பீடு, ஓய்வூதிய சேமிப்பு போன்றவை சமநிலையாக இருக்க வேண்டும்.
பொதுவாக நகையாக தங்கம் வாங்குவது உணர்வு ரீதியாக மகிழ்ச்சி தரும். ஆனால், முதலீட்டு லாபம் குறைவதுடன் சேதாரம் இழப்பு ஏற்படும். அதேநேரம் டிஜிட்டல் கோல்டு என்பது பாதுகாப்பான சேமிப்பு, திருட்டு பயமில்லை, சந்தை விலைக்கு எளிதில் விற்பனை செய்யப்படும். கோல்டு பத்திரம் வட்டியும் தங்க மதிப்பு உயர்கிறது. நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது என்பதுடன் வரிச்சலுகை வாய்ப்பும் உள்ளது. ஆனால், மக்களிடம் ஆபாணத் தங்கத்துக்கு இருக்கும் மோகம் இதற்கு இல்லை.
தங்கம் என்பது தவறான முதலீடு அல்ல. ஆனால் தங்கம் மட்டுமே பாதுகாப்பு என்று நம்புவது இன்றைய பொருளாதார உலகில் புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. ஒரு குடும்பத்திற்கு தங்கம் அவசியம். ஆனால் அளவுக்கு மீறிய தங்க ஆசை, பல நேரங்களில் பண சுதந்திரத்தை தள்ளிப்போடவும் செய்யும்.
அதனால், தங்கத்தை நேசியுங்கள்… ஆனால் உங்கள் எதிர்காலத்தை முழுவதும் தங்கத்தின் மீது மட்டும் ஒப்படைக்காதீர்கள் என்பதே மணி மேனேஜ்மென்ட் சொல்லும் மிகப் பெரிய பாடம்.
மக்கள் ஏன் தங்கம் வாங்குகிறார்கள்?
வங்கிகள் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப வட்டியைத் தருவதில்லை. இதன் காரணமாகவே தங்கத்தை வாங்குகிறார்கள். வங்கிகள் சரியான வட்டியைக் கொடுத்தால் யாரும் தங்கம் வாங்க மாட்டார்கள். தங்கத்தின் மீதான வரியை ஏற்றினால் தங்கக் கடத்தல் தான் அதிகரிக்கும்.
மோடி தங்கம் பறிப்பாரா..?
பொருளாதார வீழ்ச்சியின் அடுத்தகட்டமாக யாரெல்லாம் தங்கம் அதிகம் வைத்திருக்கிறீர்களோ, அவர்கள் தங்கத்தைக் கொடுங்கள் என்று அரசு பறித்துக்கொள்ளும் என்ற பேச்சு உலவுகிறது. இது, தற்போதைக்கு நடைமுறை சாத்தியம் இல்லை.
ஆனால், வளைகுடா போர் நீண்ட காலம் தொடர்வது, மேலும் சில நாடுகளுக்கு விரிவடைவது, பொருளாதார மந்தம், லாக் டவுன் போன்ற காரணங்களால் டாலர் இருப்பு குறைந்து பெட்ரோல் வாங்குவதற்கு சிக்கல் வரலாம். அதுபோன்ற தருணங்களில் தங்கத்துக்கு தேவை அதிகரிக்கலாம். அப்போது பொதுமக்களின் சேமிப்பு தங்கத்தை அரசு கட்டாயப்படுத்தி வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது.
