ஏப்ரல் 13 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
இந்திய விடுதலைப் போராட்ட நாட்குறிப்பில் இன்றைய தினத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆம், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று வடஇந்தியாவின் அம்ரித்சர் நகரில் இருக்கும் ஜாலியன்வாலாபாக் திடலில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று சேர்ந்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இத்திடலுக்குள் நுழையவும் வெளியேறவும் ஒரே ஒரு குறுகிய வழியே இருந்தது. இந்த நிலையில் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.
திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். பலர் சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். ஆங்கில அரசு தெரிவித்த கணக்குப்படி 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஆங்காங்கே பிரிந்துகிடந்த விடுதலைப் போராட்ட வீரர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு, போராட்டம் தீவிரமடைய இன்றைய படுகொலை காரணமாக அமைந்தது.
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ரெஜினால்ட் டயர் பிற்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்கால் லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆங்கிலேயரின் அடக்குமுறையின் கொடூரத்துக்கு இந்த ஒரு நாளே உதாரணம்.
