பாதம் காட்டும் உடல் நலக் குறிப்புகள்

சிம்பிள் மெடிக்கல் அவேர்னஸ்

முகத்தைப் பார்த்து, பல்ஸ் பார்த்து உடல் நோய் அறிகுறிகளை சிலர் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். அதேபோன்று பாதங்கள் மூலம் சில நோய்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

  • பாதம் எரிச்சல்

பாதத்தில் அடிக்கடி எரிச்சல் உணர்வு வருவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நீரிழிவு நோய், நரம்பு பிரச்னை, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் இந்த பிரச்னை வரலாம்.

  • பாதம் மரத்துப்போதல்

அடிக்கடி பாதங்களில் உணர்விழப்பு அல்லது சுறுசுறுப்பு குறைவது ஒரு ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு, நீரிழிவு, நரம்புக் கோளாறு போன்றவை காரணமாக இருக்கலாம். இதற்கு சீக்கிரம் சிகிச்சை எடுத்தால் நிரந்தர சேதத்தைத் தவிர்க்கலாம்.

  • பாதங்களில் குளிர்ச்சி

வானிலை இயல்பான வெப்பநிலையில் இருக்கும்போது பாதங்கள் குளிர்ந்தே இருப்பது கண்டிப்பாக நோய் அறிகுறி. பொதுவாக உடலில் ரத்த ஓட்டம் குறைவது,  ரத்த சோகை, தைராய்டு கோளாறு போன்ற காரணங்களால் இப்படி பாதம் குளிரலாம். இதற்கு ஒத்தடம் கொடுப்பது மட்டும் போதாது, மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • பாதங்களில் வீக்கம்

பாதங்களில் அவ்வப்போது அல்லது நீண்ட நாட்களாக வீக்கம் இருந்தால் அது இதயப் பிரச்னை அல்லது சிறுநீரகக் குறைபாடாக இருக்கலாம். நீண்ட நேரம் நின்றது அல்லது குறுகிய இடத்தில் காலை மடக்கி அமர்ந்தது போன்ற காரணங்கள் இல்லையென்றால் அவசியம் மருத்துவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பாதம் வலி

பொதுவாக பாதத்தில் எளிதில் வலி வருவதில்லை.  ஹீல்ஸ் அணிவது, எங்கேனும் இடித்துக் கொள்வது போன்ற காரணங்களால் பாதத்தில் அல்லது குதிகாலில் வலி ஏற்படலாம். சாதாரண வலி தானாகவே போய்விடும். மூட்டு வலி, எலும்பில் சிறு முறிவு இருந்தால் வலி தானாக சரியாக வாய்ப்பு இல்லை. எனவே, மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

இதுபோன்று குதிகாலில் பிளவுகள் தோன்றுவதற்கு உடலில் நீர்ச்சத்துக் குறைவு, தைராய்டு போன்றவை காரணமாக இருக்கக்கூடும். நகங்களில்  கருப்புக்கோடு, புள்ளி தென்படுவது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தொற்று நோயாக இருக்கலாம். உடலில் தோன்றும் நோய் அறிகுறிகளை முன்கூட்டியே பாதங்கள் காட்டிவிடும். எனவே, தினமும் பாதங்களை பரிசோதனை செய்யுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment