காந்தி ஏன் சுடப்பட்டார்..?

மரண தருண நிகழ்வுகள்

1948 ஜனவரி 30. இந்திய நாட்டுக்கு கரும்புள்ளி. அமைதிக்குப் பாடுபட்ட காந்தி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நாள்.

அன்றைய தினம் என்ன நடந்தது..?

புதுடெல்லி பிர்லா ஹவுஸில் மாலை நேரப் பிரார்த்தனைக்கு வந்த காந்தியை ஒரு தொண்டன் போன்று வந்திருந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொலை செய்தான். இப்போது இங்கு காந்தி சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சரியாக மாலை 5:15 – 5:17 மணிக்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கோட்சே Beretta M1934 என்ற சிறிய பிஸ்டலை மறைத்து கொண்டு வந்தான். காந்தியை வணக்கம் செய்தபிறகு மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். சுடப்பட்டதும் காந்தியின் உடல் வீட்டுக்குள் உடனே எடுத்துச் செல்லப்பட்டது. மருத்துவர்கள் பார்வையிட்டு அவர் உயிர் இழந்ததை உறுதி செய்தார்கள்.

தடுக்கப்பட்ட வன்முறை

காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியது. தகவல் அறிந்து படேல், நேரு ஓடிவந்தனர். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டனர்.

“காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…” என்று வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டனர்.

அன்று முஸ்லீம்கள் மீது போடுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போட்ட திட்டம் முறியடிக்கப்பட்டது. அன்றைய தினம் காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தி பரவியிருந்தால் நாடே ரத்தக்களரியாக மாறியிருக்கும். முஸ்லிம்கள் வேட்டையாடி கொல்லப்பட்டிருப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.க்கு என்ன கோபம்..?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார்.

பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும் என்றார்.

“மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

நவகாளி கலவரத்தை அடக்குவதற்கு ராணுவமே செல்வதற்குத் தயங்கிய நிலையில் காந்தி தனி மனிதராகச் சென்றார். இது குறித்து இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன், “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.” என்று பாராட்டியிருந்தார். இதுதான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு கோபம் கொடுத்தது.  

இந்த நாட்டுக்கு காந்தி இன்றும் தேவைப்படுகிறார். இந்த நாடு ஆன்மிகத்தை நோக்கி நகர்த்தப் படும் நேரம் எல்லாம் காந்தி அதிகம் தேவைப்படுகிறார். அவர் நினைவுகளை இளைய சமுதாயத்திடம் பரப்புவதே இன்று அனைவரும் நாட்டுக்கு செலுத்தவேண்டிய அஞ்சலி.

Leave a Comment