திராவிட ஆட்சிக்கு வரலாற்று திருப்பம்
இன்றைய நாளில் அதாவது 1967ம் ஆண்டு ஜனவரி 12 மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். வீட்டில் மூன்று துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, தயாரிப்பாளர் வாசு ஆகியோர் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தார்கள். அதனால் நீதிமன்றத்தில் வாசு கூறியதை வைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டது.
‘எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா’ என வாசு வாக்குமூலம் கொடுத்தார்.
’அது பொய், எம்.ஜி.ஆர். என்னை சுட்டார்’ என்று எம்.ஆர்.ராதா கூறினார். ஆனால், வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியில் வெளியேறியவை என்று காவல் துறை நிரூப்பித்தது.
என்ன காரணம்..?
எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். இருவரும் நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர். போன்று எம்.ஆர்.ராதாவால் வெற்றி பெற முடியவில்லை. எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்படும் அதிக மதிப்பும் மரியாதையும் எம்.ஆர்.ராதாவுக்குப் பிடிக்கவில்லை.
பெரியாரின் தீவிர ஆதரவாளராக எம்.ஆர்.ராதாவும் அண்ணாதுரையின் ஆதரவாளராக எம்.ஜி.ஆரும் இருந்ததால் அரசியலிலும் திரைத்துறையிலும் அவர்களுக்குள் போட்டி இருந்தது. படப்பிடிப்பு தளங்களில் மற்றவர்களைப் போன்று எம்.ஆர்.ராதா தனக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பதால், அவருக்கு எம்.ஜி.ஆர். மறைமுகமாக பல்வேறு இடையூறுகள் கொடுத்ததாக ராதாவின் தரப்பில் சொல்லப்பட்டது.
துப்பாக்கி சூடு
எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற எம்.ஆர்.ராதா அவரது துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார். எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டதும் குண்டு இடதுகாதை ஒட்டி துளைத்துக் கொண்டு போனது. அதன் பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர்.
எப்படி பிழைத்தார்கள்..?
எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிக் குண்டுகள் அடிக்கடி உருண்டு தேய்ந்ததால் அதன் பிடிமானம் தளர்ந்துவிட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த வழக்கு விசாரணை மிக விரைவாக நடந்தது. நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில். ‘அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது’ எனக் கூறினார்.
இதையடுத்து எம்.ஆர். ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் எம்.ஆர். ராதா விடுதலையானார்.
இந்த நாள் இன்னொரு வகையில் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் 1972ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டடி பட்ட படத்தை போஸ்டர்களாக திமுக தமிழகம் முழுக்க ஒட்டியது. இந்த போஸ்டரில் கிடைத்த அனுதாப வாக்குகள் காரணமாகவே காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது.
இன்று வரை திராவிட கழகங்கள் தமிழகத்தை ஆட்சி புரிகின்றன என்றால், அதற்கான ஆரம்பப்புள்ளி இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்.
