அறிவிருக்கா என்று கேட்டால் கோபம் வருகிறதா..?

வாழ்க்கைத் தத்துவம்

பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொல்வதற்கு யாரும் கூச்சப்படுவதில்லை. அதேநேரம், அறிவு இருக்கிறதா, மூளை இருக்கிறதா என்று கேட்டுவிட்டால் சட்டென கோபப்படுகிறார்கள். சண்டைக்குப் போகிறார்கள்.

அறிவு இருக்கிறதா என்று கேட்டதற்காக ஒருவர் சண்டைக்குப் போகிறார் என்றால், அவருக்கு தெளிவு இல்லை என்று அர்த்தம். அதாவது அவருக்கு அறிவு இருக்கலாம், போதிய தெளிவு இருக்குமா என்பது உறுதியில்லை.

அறிவு என்பது வெளியில் இருந்து வருவது. பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் ஒருவருக்குக் கிடைப்பது அறிவு. இந்த அறிவு எல்லோருக்குமே இருக்கும். அதனால்தான், அறிவு இருக்கிறதா என்று கேட்டதும் கோபம் வருகிறது.

ஆனால், தெளிவடைந்த மனிதர்கள் இப்படிப்பட்ட கேள்விக்கு கோபப்பட மாட்டார்கள். ஏனென்றால், ஆழ் மனதில் இருந்து தோன்றுவது தெளிவு. அறிவை ஒருவருக்கு யாரேனும் கற்பிக்க முடியும், ஆனால், தெளிவை கற்பிக்க முடியாது, தானே, தனக்குள் தேடித்தான் தெளிவை கண்டடைய முடியும்.

அறிவினால் புதிதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க முடியுமே தவிர, ஏற்கனவே இருக்கும் இயற்கையின் ஆழத்தை அறிய முடியாது.  

ஏனென்றால் அறிவு என்பது, ஒருவருடைய சொகுசு மற்றும் சந்தோஷமான வாழ்வுக்குத்தான் வழி காட்டும். நிம்மதியான வாழ்க்கைக்கு அறிவு மட்டும் போதாது, தெளிவுதான் முக்கியமாக இருக்க வேண்டும்.  

குறிப்பாக ஆத்மா, தலையெழுத்து, பிறவிப்பயன், முன்வினை போன்ற ஏராளமான கேள்விகள் இந்த வாழ்க்கைக்குத் தேவையற்ற எண்ணங்கள் என்பதைப் புரிந்துகொள்வதே தெளிவு.

இந்த தெளிவு வந்துவிட்டால் இன்பத்தைப் போன்று துன்பமும் நிகழும். ஜனனம் போலவே மரணமும் நிகழும் என்பது புரிந்துபோகும். உலகத்து நிகழ்வுகளை, நெருக்கடிகளை மூன்றாவது மனிதர் போன்று வேடிக்கை பார்க்க முடியும். இந்த தெளிவுக்கு ஆசைப்படுங்கள். அதுவே மகிழ்ச்சி.

Leave a Comment