பேச்சு என்பதும் மருந்து
என்ன சந்தேகம் என்றாலும் உடனடியாக தீர்த்துக்கொள்வதற்கு இணையத்தில் வழிகள் இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் இருந்து தகவல்கள் மனிதர்கள் தலைக்குள் கொட்டப்படுகின்றன. அதனால் ஏராளமான விஷயங்கள் அறிந்துகொள்கிறார்கள்.
அதேநேரம், எல்லாவற்றையும் மேலோட்டமாக அறிந்துகொள்வதே போதும் என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். நிறைய நிறைய அறிந்திருந்தாலும் சொந்த வாழ்க்கை என்று வரும்போது சோர்வடைகிறார்கள், எதுவும் புரியாமல் தவிக்கிறார்கள்.
அதாவது, தோல்வி, ஏமாற்றம், வருத்தம், பொறாமை, போட்டி, உடல்நலக் குறைபாடு ஏற்படும் நேரத்தில், அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமல் தடுமாறுகிறார்கள். இந்த சூழலில் கையறு நிலையில் மாட்டிக் கொள்கிறார்கள். வழி இல்லாத அறைக்குள் சிக்கியது போன்று இருட்டுக்குள் தள்ளப்பட்டு திசை தெரியாமல் தவிக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு பக்கம் இன்பமும் மறுபக்கம் துன்பமும் கொண்ட நாணயம் என்பதை அத்தனை எளிதில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எதிர்பாராத தருணத்தில் தாய், தந்தை, சகோதரரை இழக்கும் தருணத்தில், பாதை முடிந்துபோனது போன்ற அதிர்ச்சி இருக்கும்.
அந்த தருணத்தில் அவருக்குத் தேவை அன்பு, ஆதரவு, நம்பிக்கை. அந்த நேரத்தில் ஆறுதல் சொல்வது அநாகரிகம் என்று தவிர்க்கத் தேவையில்லை. சாய்வதற்குத் தோள் இல்லாமல் அலைபவருக்குத் தேவை ஆறுதல், நம்பிக்கை மட்டுமே.
தோல்வி, கவலையில் சிக்கியிருப்பவருக்கு மனம்விட்டுப் பேசுவது தான் வேதனைக்கும் வலிக்கும் தீர்வாக இருக்கும். பிறரிடம் துன்பத்தை, வலியை, தோல்வியை பகிரும்போது அது பனி போன்று உருகுவதைக் காணமுடியும்.
எல்லோருக்கும் துன்பத்தை கொட்டித் தீர்ப்பதற்கு நம்பிக்கையான தோள்கள் இருப்பதில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் கவுன்சிலிங் உதவி செய்கிறது.
இன்னொரு மனிதரால் அவரது வாழ்க்கைக்கு சரியான தீர்வு சொல்ல முடியாது. அதேநேரம், அவர் வாழ்க்கையில் என்ன பிரச்னை என்பதையும் எப்படி தீர்வு காண வேண்டும் என்றும் சொல்ல முடியும். இந்த ஆறுதலும் நம்பிக்கையும் தரும் பேச்சும் மருந்து போன்று மனதையும் உடலையும் குணப்படுத்தும்.
ஆகவே, வாழ்க்கையில் குழப்பம், சிக்கல் வரும் நேரத்தில் மனதுக்குள் போட்டு சுமந்துகொண்டே இருக்காதீர்கள். அந்த கவலை பெரிய மரமாக வளர்ந்துவிடும். இன்னொரு நபரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அப்படியொரு நபரை கண்டறிய முடியவில்லை என்றால் கவுன்சிலிங் செல்லுங்கள். உடலும், மனதும் குணமடைந்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
