ஞானகுரு பதில்கள்
கேள்வி : சிலருக்கு திருமண பந்தம் அமையாமல் போவதேன்… சிலருக்கு பிரிவு ஏற்படுவது ஏன்..?
- பி.ரவிக்குமார், முத்தால்நகர்.
ஞானகுரு :
பொறந்த அன்னைக்கே இன்னாருக்கு இன்னாருன்னு எழுதி வைச்சிருப்பான் என்ற நம்பிக்கையில், சிலர் இலவு காத்த கிளி போல காத்துக்கொண்டே இருக்கிறார்கள். துணை மட்டுமல்ல எந்த ஒன்றுமே ஆசையும், ஆர்வமும் கொண்டு தேடுபவருக்கே கிடைக்கும். தேடுபவரே கண்டடைவார்கள். தன்னால் தேட முடியவில்லை என்றால் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உதவியை நாட வேண்டும். தலையில் எழுதியிருந்தால் நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களுக்கும் ஏதேனும் காரணங்களைச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப்போடுபவர்களுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் திருமண பந்தம் அமையாது போய்விடுகிறது.
படிப்பும் பொருளாதார சுதந்திரமும் இல்லாத காரணத்தால் கணவன் என்ன சொன்னாலும், செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நேற்றைய பெண்கள் இருந்துவந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. தன்னுடைய சுயத்தை இழக்க விரும்பாத பெண்களும், ஆண்களும் தைரியமாக திருமண பந்தத்தை உடைத்து வெளிவருகிறார்கள். இந்த மாற்றத்தை யாரும் தடுக்க முடியாது.
கேள்வி : உடல் கஷ்டம், மனக் கஷ்டம், பணக் கஷ்டம் இல்லாத மனிதர்கள் உண்டா..?
- எஸ்.சந்திரபோஸ், யமுனை தெரு.
ஞானகுரு :
ஆசைகள் இல்லாத மனிதரை கண்டுபிடியுங்கள். அவர் இப்படிப்பட்ட கஷ்டங்களையும் எல்லா துயரங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருப்பதைக் கவனிக்க முடியும்.
