என்ன செய்தார் சைதை துரைசாமி – 441
2015 சென்னையைப் புரட்டிப் போட்ட பெருமழைக்கு பெருநகர சென்னை மேயரான சைதை துரைசாமி என்னென்ன பணிகள் செய்தார் என்பதை மன்றக் கூட்டத்தில் விளக்கமளித்தார். அதன் சுருக்கத்தைப் பார்த்துவருகிறோம்.
பருவமழைக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துப் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சியின் அனைத்து துறைகள் மற்றும் 22 அரசு துறைகள், ஆக மொத்தம் 23 முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் பங்குபெற்ற மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டம் 01.09.2015 அன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் 23 முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
சென்னை மாநகராட்சியின் அனைத்து துறை தலைவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை குழுமம், பொது பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வேளாண் பொறியியல் துறை, பொது மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை, மண்டல வானிலை ஆராய்ச்சி நிலையம், மீன்வளத் துறை, இராணுவம் மற்றும் கடற்படை, மாநகர போக்குவரத்து கழகம், உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை தொலைபேசி அலுவலகம், தென்னிந்திய ரயில்வே துறை, ஆவின் நிறுவனம், மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மற்றும் அஞ்சல் துறை ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பருவமழைக் காலத்தில், அனைத்து துறைகளும் எடுக்க வேண்டிய மழைக்கால முக்கிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டு கையேடு தயாரிக்கப்பட்டது. அந்தக் கையேட்டில், அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகளின் விவரங்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 2000 கையேடுகளுக்கு மேல் அச்சிடப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. அப்படி இருந்தும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டமே நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…’’ என்று சொன்னதுடன் நில்லாமல் ஆதாரங்கள் கொடுத்துப் பேசினார்.
- நாளை பார்க்கலாம்.
