சென்னை வெள்ளத்திற்கு காரணமான ஆக்கிரமிப்புகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 435

2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை யாரும் ஒருபோதும் மறக்க முடியாது. வரலாறு காணாத பெருமழை பெய்தது. அந்த நேரத்தில் பெருமழை வெள்ளத்தை கடலுக்குள் அனுப்ப முடியாமல் அத்தனை நீர்நிலைகளும் நிரம்பிவழிந்தன.

நகரம் முழுவதும் ஒரே அகலத்தில் நீர்நிலை ஓட்டம் இருந்தால் ஊருக்குள் வெள்ளம் புகவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், சென்னையில் அப்படியொரு சூழல் இல்லை.

அடையாறு, சத்தியா ஸ்டுடியோ அருகில் இருக்கும் திரு.வி.க மேம்பாலத்தை ஒட்டி 485 மீட்டராகவும், மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் 222 மீட்டராகவும் அகலம் கொண்ட அடையாறு,   நந்தம்பாக்கத்தில்  59 மீட்டராகவும், சைதாப்பேட்டை மேம்பாலம் பகுதியில் 83 மீட்டராகவும், கோட்டூர்புரம் பகுதியில் 125 மீட்டராகவும் சுருங்கி ஓடுகிறது. இந்த சுருக்கம் காரணமாகத்தான்  வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

அடையாறு சுருங்கியதற்குக்  காரணம் ஆக்கிரமிப்புதான்.  இந்த ஆக்கிரமிப்பு  1967-ம் ஆண்டுதான் அதிகாரபூர்வமாக  தொடங்கியது எனலாம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ன தவறு நடந்தாலும், அதற்குக் காரணம் திமுக என்று குற்றம் சாட்டும் மனப்பான்மையாக இந்தக் குற்றச்சாட்டை நினைக்கக்கூடாது. உண்மையை பதிவு செய்யவேண்டியது அவசியம் என்பதாலே இந்த விஷயம் இங்கு  குறிப்பிடப்படுகிறது.

1967-ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, ‘கூவம் மணக்கிறது, கூவத்தில் படகு விடுகிறோம்’  என்று  கூவம் சீரமைப்புத் திட்டத்திற்காக திருவாரூரில் இருந்து  நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்களை சென்னைக்கு அழைத்துவந்தார். அந்தத் தொழிலாளர்கள்தான்  முதன் முதலாக கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து,  குடிசை போட்டு தங்கினார்கள். அமைச்சரின் ஆசிர்வாதத்தோடு அந்த  முதல் ஆக்கிரமிப்பு எந்த ஆட்சேபனையும் இல்லாமல் நடந்தேறியது. அதன்பிறகே அடித்தட்டு  மக்களும் ஆற்றங்கரைகளில் மளமளவென ஆக்கிரமிப்பில் ஈடுபடத் தொடங்கினார்கள். அரசு அவர்களை அகற்றுவதற்கு  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றதும், ஏராளமான அரசியல்வாதிகள் மக்களை குடியேற்றம் செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.

இன்னும் பல காரணங்களை நாளை பார்க்கலாம்.

Leave a Comment