ஞானகுரு பதில்கள்
கேள்வி : கூகுளில் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் என்று நம்பும் இளைஞர்கள் பற்றிய கருத்து என்ன..?
- எம்.முகுந்தன் அல்லம்பட்டி.
ஞானகுரு :
ஒரு காலத்தில் புகைப்படம் எடுப்பதற்கும், சினிமா எடுப்பதற்கும் சூரிய ஒளி மிகவும் முக்கியம். எனவே சூரியன் இல்லாத நேரத்தில் சினிமா சூட்டிங் நடக்காது. அதன்பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருட்டிலும், தண்ணீருக்குள்ளும், ஓடும் காரிலும் படம் எடுக்கும் அளவுக்கு கேமரா வந்துவிட்டன. அனைத்து வசதிகளுடனும் கேமரா வந்துவிட்டது என்பதால் இனி கேமராமேன்களுக்கு மதிப்பு குறைந்துவிடுமா என்று பிரபல கேமராமேன் ஒருவரிடம் கேட்டபோது, ‘எத்தனை சிறப்பான கேமரா வந்தாலும், அதனை ரசனையுடன் இயக்குவதற்கு மனிதர்களே தேவை’ என்று சொன்னார். அப்படித்தான் கூகுளில் நிறைய விடைகள் கிடைக்கலாம். ஆனால், அவற்றில் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் அறிவு.
கூகுள் மேப் உங்களை சரியாக கூட்டிச்செல்லும் என்பது உண்மை. அதேநேரம், தவறாகவும் கூட்டிச்செல்லும். இணையத்தின் வேகம், மாற்றம் போன்ற காரணங்களால் தவறு நிகழ்வதை எல்லோருமே அறிய முடியும். எனவே, கூகுள் என்பதை ஒரு கருவியாக மற்றும் பயன்படுத்துவதே போதும்.
கேள்வி : லட்சியப் பாதைகளில் முன்னேறுபவர்கள் தடைகளை எவ்வாறு முறியடிக்கின்றனர்..?
- எம்.பழனிகுமார் கள்ளிக்குடி.
ஞானகுரு :
லட்சியப் பாதைகளில் செல்பவர்கள் தங்களுக்கு முன்னே தென்படும் தடைகளை படிக்கட்டுகளாக மட்டுமே பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பாசிடிவ் சிந்தனை உள்ளவர்களாலே லட்சியங்களை நோக்கி பயணிக்க முடியும்.
