ஞானகுரு பதில்கள்
கேள்வி : மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைதானே மனிதனை இயக்குகிறது..?
- என்.பாண்டியராஜன், சிவகாசி.
ஞானகுரு :
உயிர் வாழ்தலும், புதிய உயிர்களை உருவாக்குதலும் அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை இலக்கணம். இதற்கான போராட்டங்களை ஆசை என்று வரையறுக்க முடியாது. அடிப்படைத் தேவைகள் நிரம்பிய மனிதர்களே அடுத்தகட்டத்துக்கு அதாவது மண், பெண், பொன் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கும் தெளிவடைந்த முதியோர்களுக்கும் மண்ணும் பொன்னும் ஒரு பொருட்டே இல்லை. இடைப்பட்ட காலத்தில்தான் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்பட்டு அலைந்து அல்லல்படுகிறான்.
கேள்வி : உடல் வலிமை, மனவலிமை இவற்றில் எது ஆற்றல் மிகுந்தது..?
- டி.ராஜலட்சுமி, என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
ஓடுவதற்கான கால்களின் அமைப்பு பெற்றவன் மற்றவர்களைவிட சிறப்பாக ஓட முடியும் என்பது உண்மை. ஆனால், அவனுடைய வெற்றியைத் தீர்மானிப்பது மன வலிமை மட்டுமே. உடல் வலிமை ஒவ்வொரு காலத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும். எத்தனை முயற்சி செய்தாலும் 70 வயது முதியவரால் 20 வயது இளைஞருடன் போட்டியிட்டு ஓடி ஜெயிக்க இயலாது. ஆனால், மன வலிமையை என்றென்றும் குறையாமல் பாதுகாக்க முடியும். உடல் நோய் தன்னைத்தானே ஓரளவு குணப்படுத்திக்கொள்ளும். ஆனால், மன நோய் தனக்குத்தானே சரியாவதில்லை.
