மனசாட்சி என்ன செய்யும்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மனசாட்சி இன்றும் மனிதர்களுக்கு இருக்கிறதா..?

  • பி.துரைச்சாமி, லட்சுமி நகர்.

ஞானகுரு :

நமக்குள் இருக்கும் அறிவு என்பதுதான் மனசாட்சி. நாம் எப்படிப்பட்டவர் என நம்மை எடைபோட்டுச் சொல்வதே மனசாட்சி. நமக்குள் ஒரு நீதிபதியாக மனசாட்சி அமர்ந்துகொண்டு நாம் செய்யும் செயல்களை நன்மை என்றும் தீமை என்றும் வழி காட்டுகிறது. நல்ல தீர்மானம் எடுக்க வழிகாட்டுவதும் தீயவை செய்வதற்கு எச்சரிப்பதும் மனசாட்சியே.

தொடர்ந்து மனசாட்சிக்கு எதிராக நடந்துகொள்ளத் தொடங்கினால், அதன்பிறகு மனசாட்சி தன்னுடைய வேலையை செய்வதில்லை. அதனாலே முதல் தவறு செய்வதற்கு ரொம்பவும் தயங்குபவர், அடுத்தடுத்த தவறுகள் செய்வதற்கு கொஞ்சமும் அஞ்சுவதில்லை. ஆனால், உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்களும், மனசாட்சிப்படி வாழும் மனிதர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி வாழும் மனிதர்களை காண வேண்டுமென்றால், கீழே குனிந்து பாருங்கள். நிறைய பேரை தரிசிக்க முடியும்.

கேள்வி : தாங்கள் என்ன செய்தாலும் அது சரி என்று மனிதர்கள் நினைக்கிறார்களே, அது ஏன்..?

  • ஏ.தேவிப்பிரியா, சூலக்கரை மேடு.

ஞானகுரு :

தவறான கேள்வி இது. தங்களுடைய செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் வழக்கறிஞராகத்தான் இருக்கிறான். நான் ஏன் அதை செய்தேன் என்று அவனுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான். தான் செய்தது சரியானதே என்று வாதாடுகிறான். அதேநேரம், அடுத்தவர் செய்த செயலுக்குத்தான் நீதிபதியாக இருந்து கறாராக தண்டனை தருகிறான். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு தீமை நடந்துவிட்டது என்றால், கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார் என்று சொல்கிறான். அதேபோல் ஒரு தீமை தனக்கு நேர்ந்துவிட்டால், கடவுள் தன்னை சோதிக்கிறார் என்கிறான். இதுவே மனித குணம்.

Leave a Comment