சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 5 – டாக்டர் பதூர் மொய்தீன்
திருமண பந்தத்தில் பெண்கள் எத்தனை திருப்பங்களை, கொடுமைகளை, சந்தித்தும் சகித்தும் வாழ்கிறார்கள் என்பதை விளக்கும் மருத்துவ ஆய்வுத் தொடர்.
*
தற்காலத்தில் பெண்கள் எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமுதாயமும் பெண் கல்வியை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கமும் பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. தடைகள் எல்லாம் தகர்ந்து பெண்கள் கல்வி கற்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும் இங்கு தடையில்லை என்கிற நிலையை மெல்ல மெல்ல எட்டி வருகிறோம்.
இத்தகைய சூழலில் பெண் கல்வியும் பெண் முன்னேற்றமும் காலம் காலமாக கட்டிக்காத்துவந்த பெண்மை என்கிற உணர்வும், அவர்களின் தன்மையும் தளர்ந்துபோய்விட்டது என்கிற சர்ச்சைக்குரிய கருத்துகளும், குரல்களும் ஆங்காங்கே ஒலிக்காமல் இல்லை.

பெண் என்பவள், படித்து பணிகளுக்குப் போவது என்பது ஒருபுறமிருந்தாலும், பெண் என்பவள் காலையில் எழுந்து குளித்து, வீட்டு சமையல் உள்ளிட்ட வேலைகளை கவனித்து, வீட்டில் உள்ளவர்களை எல்லாம் பேணி பாதுகாக்க வேண்டியவள். பெண் கல்வியும், அவள் பணிக்கு செல்லும் நிலையும் இத்தகைய சாதாரணமாக இருக்கவேண்டிய பெண்களின் வாழ்வை மாற்றியைமைத்துவிட்டது என்கிற குரலை பழைமையான கருத்துகளில் ஊறிப்போனவர்களின் கருத்தாக இருக்கிறது.
மாலையில் பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள், பணிக்குச் சென்ற கணவன் வீடு திரும்பும்போது ஒரு தாயாக, ஒரு மனைவியாகவும் அந்த பெண் நடந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் சமூகத்தில் சிலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருவதையும் மறுப்பதற்கில்லை. இன்றைய சூழலில் இத்தகைய எதிர்ப்பார்ப்புகளை கணவனும், குழந்தைகளும் தவறவிடுகிறார்கள்தான். இதனை வீட்டினரும், சமுதாயமும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள்தான். அவர்களுக்கு என்று தனி சிந்தனைகள், கருத்துகள், சுதந்திரம், தனித்த குரல் இருக்கின்றன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவர்கள்தான்.
இந்த நிலையில் ஒன்றை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். படித்துவிட்டு, பணிக்குச் செல்லும் பெண்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தாங்கள் பணிக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் தங்கள் குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் சரியாக கவனிக்க முடியவில்லை, பணிக்குச் செல்லாத பெண்களைப் போல தாங்களும் வீட்டு வேலைகளை முறையாக செய்ய முடியவில்லை என்கிற குற்றவுணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கவலையோடுதான் பல பெண்கள் பணிக்கு சென்று வருகிறார்கள்.
குடும்பப் பணிகளை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்பதில் ஒரு சதவிகிதம்கூட நிஜமில்லை. ஒருசிலர் மட்டும்தான் தாங்கள் பணிக்கு செல்கிறோம், வீட்டு வேலைகளை கவனிக்கக் கூடாது என்கிற மமதையில் இருக்கிறார்கள். இதனை எல்லா வீட்டினரும் மனமுவந்து புரிந்துகொள்ள வேண்டும்.
குடும்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலைமை அந்தக் காலத்தில் சாதாரணவிஷயமாக இருந்தது. பெரும்பாலும் அந்தக் காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. விதியின் மீதும், கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு எண்ணிக்கையில் அதிகமாகக் கூட குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையே இருந்தது.
குழந்தைப் பிறப்பு என்கிற கட்டுப்பாடு தம்மிடம் இருப்பதாக மக்கள் அந்தக் காலத்தில் கருதவே மாட்டார்கள். குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை கவனித்து வளர்க்க வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை மாமன் என்று பெரியவர்கள் இருந்தார்கள். கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பில் குழந்தை பெற்றுக்கொள்வதும், பிறந்த குழந்தைகளை வளர்ப்பதிலும் சிரமம் இல்லாமல் இருந்தது.
அதே போல திருமணமானவுடன் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் தாங்களாகவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டிய நிலையைத் தாண்டி, அவர்களை புரிந்துகொள்ள வைக்க வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். வீடு என்கிற அமைப்பில் அந்தக் காலத்தில், இதுகுறித்த தொடர்ந்த உரையாடல் நிகழும். உறவுகளுக்கு இடையே புரிந்துணர்வு என்கிற அம்சம் இயல்பாகவே நிகழ்ந்துவிடும்.
இதுதான் பெண்களின் கடமை, பொறுப்பு என்று எடுத்துச்சொல்ல சுற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். மேலும், அவர்களைப் பார்த்து இவர்கள்… இவர்களைப் பார்த்து அவர்கள் என்று கற்றுக்கொள்ளும் நிலையும் மேலோங்கியிருந்தது. இப்படி பொறுப்புடன், கடமையுடன் இருந்ததால்தான் நாங்கள் நன்றாக வாழ்கிறோம். நீங்களும் எங்களைப்போல வாழ வேண்டும் என்று சொல்வது மாதிரியே பலரது வாழ்க்கையும் அன்றைக்கு இருந்தது. ’வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ என்று கவியரசு கண்ணதாசன் பாடியதைப் போலத்தான் அன்றைக்கும் வீடும் சமுதாயம் இருந்துவந்தன.
ஆட்டம் போடுவதை விடவும் அடங்கிப்போவதால் பெரும் நன்மைகள் கூடிவரும் என்கிற நம்பிக்கை அந்தக் கால மக்களிடம் இருந்தது. இத்தகைய சூழலும் அன்றைய நாள் பெண்கள் பழக்கப்படுத்தப்பட்டார்கள். அல்லது பழகிக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எதிர்த்து கேள்வி கேட்பது, அடங்காமல் ஆட்டம்போடுவது என்பது கெட்ட செயல் என்று அறிவுறுத்த ஆட்கள் இருந்ததால், அவர்களின் பேச்சுக்கு, கருத்துக்கு, குரலுக்கு கட்டுப்பட்டே பெண்கள் இருந்துவந்தனர். ’பொறுத்தார் பூமி ஆள்வார்’, நங்கையும் நிலமும் ஒன்று இரண்டும் அதிரக்கூடாது என்கிற கட்டுப்பெட்டித்தனமான கொள்கைகள் அந்தக் காலத்தில் கோலோச்சின. இவையெல்லாம் எழுதப்படாத விதிகளாகவே அன்றைய மக்களின் புழக்கமாக இருந்தது.
’வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்லிக்கொண்டே இருக்க வீட்டில் யாரோ ஒருவர் இருந்துகொண்டே இருந்தனர். எல்லாம் நன்மைக்கே, எல்லாம் விதிவசத்தால் நிகழ்வது, விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போனதில்லை என்கிற நம்பிக்கைகளும், ஆறுதல்களும் இலவசமாக எல்லா பெண்களுக்கும் கிடைத்தன.
ஜென்மம், மறுஜென்மம், கர்ம வினை, பாவ புண்ணியம், விதியின் விளையாட்டு, எதற்கும் முடிவுண்டு, எதற்கும் காரணம் உண்டு என்று நம்பிக்கையூட்டப்பட்டன இதனடிப்படையிலேயே பெண்ணின் வாழ்வு என்பது ஒரு வட்டத்துக்குள்ளேயே அடங்கிப்போனது. மனம் பேதலிக்கவும், சஞ்சலத்துக்கு ஆளாகவும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
‘சித்தார்த்தன் புத்தன் ஆனான்… யசோதரை என்னவானாள்?’ என்று இன்றைக்கு கேள்வி எழுப்புகின்றனர் இன்றைய பெண்ணியவாதிகள். ஆனால், அந்தக் காலத்தில் இத்தகைய கேள்வி கேட்கும் நிலையில் அப்போதைய பெண்கள் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து செயல்படுவதற்குள் பெண் முக்கால்வாசி வாழ்வை வாழ்ந்து தீர்த்துவிடுகிற நிலையில் தான் அன்றைய பெண்கள் இருந்தனர்.
அப்படி சிந்தித்து முடிவெடுக்க நினைக்கும் நிலை அவளுக்கு வந்தபோது அவளின் இளமை காணாமல் போயிருந்தது. ஆணை சார்ந்துதான் பெண் வாழ்வு என்பது இருக்கும் என்கிற எண்ணத்தில்தான் அன்றைய பெண் சமுதாயம் இருந்தது.
அடுத்த தலைமுறைக்காக வாழ்வது என்கிற நிலையை, பெண் எட்டுவதற்கு பெண் நிறைய போராட வேண்டியிருந்தது. பிரச்னைகளோடு வாழ பெண்கள் பழகிக்கொண்டார்கள். அந்தப் பிரச்னைகளும் காலத்தின் போக்கில் நீர்த்துப்பொய்விடும் என்கிற நம்பிக்கையும் பெண்களிடையே உறுதியானது. காலமும் பெண்களுக்கு கைகொடுத்தது. சமுதாயத்தால் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் தடைகளும் விமர்சனங்களும் குறையத் தொடங்கியுள்ளன.
- தொடரும்
