- முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர் – 641 018.
இயற்கைப் பொருட்களின் மருத்துவத்தன்மை அபாரமானது. அந்த வகையில் கருமஞ்சளின் மருத்துவத்தன்மையை விவரிக்கிறார் பேராசிரியர்.
மஞ்சள் என்றாலே மருத்துவக் குணம் நிரைந்தது. அதில் கற்கியூமா கேசியா என்னும் ஜின்ஜிபரேசி குடும்பத்தைச் சார்ந்த கருப்பு அல்லது கரு நீல மஞ்சள் ரொம்பவே விசேஷம். இந்தியாவில் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒரிசா, சட்டிஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் காணப்படும் அரிய வகை மூலிகை ஆகும்.

கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலும் பல்வேறு வகையான உணவுகளில் இதன் மருத்துவத் தன்மை காரணமாக பயன்படுத்தப்படுகிறது. கற்கியூமா கேசியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரத்தின் நிலத்தடி தண்டுகிழங்கு மற்றும் இலைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. நீள் வட்ட வடிவில் சற்றே கூரான அல்லது மழுங்கலான முனையைக் கொண்டிருக்கும் கிழங்குகள் இலைதழும்புகள், சல்லி வேர்கள், வளையங்கள் மற்றும் கணுக்களை கொண்டிருக்கும். இதன் தோல் பகுதி கரும்பழுப்பு நிறத்திலும், கடினமானதாகவும் இருக்கும். உட்புறத்தில் அதிக நார்களையும் நீர்ச்சத்தையும் கொண்டிருக்கும். மஞ்சள் வகைகளிலேயே மிக அரிதான தாவரமாக அறியப்படுவது இந்த கருமஞ்சள்.
காலி ஹல்தி என்று அறியப்படும் கருமஞ்சள் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், இதன் மிகுந்த மருத்துவ குணத்தின் காரணமாக பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மஞ்சள் விழுது தேநீரில் கலந்து உட்கொள்ளப்படுகிறது.
துண்டாக நறுக்கப்பட்ட கருமஞ்சள், தேன் மற்றும் கரும்பு போன்ற இனிப்பு பொருட்களுடன் சேர்த்து சில வாரங்கள் வைக்கப்பட்டு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காய வைத்து அரைக்கப்பட்ட கருப்பு மஞ்சளின் பொடி உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட பலராலும் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூதிகளில் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது.
லேசான கசப்பு தன்மை கொண்ட கருப்பு மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி சாருடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. கருமஞ்சளின் விழுது, காயங்களில் பூசப்பட்டால் காயங்கள் விரைவாக குணப்படுத்தப்படும். தோல் அரிப்பு மற்றும் விஷ கடிக்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது. கருமஞ்சளின் விழுது பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், வயிற்று வலிக்கு நிவாரணமாகவும் அமைவதாக அறியப்படுகிறது. கை கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் கருமஞ்சளின் விழுது தேய்க்கப்படுகிறது. மேலும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கு நெற்றியில் பூசப்படும் போது ஒற்றைத் தலைவலியின் விரியம் குறைவதாகவும் அறியப்படுகிறது.
பொதுவாக கருமஞ்சள் பொடியாகவும், விழுதாகவும் மற்றும் எண்ணெயில் ஊறவைக்கப்பட்ட தயாரிப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய சிறிதளவு கருமஞ்சள் பொடி தண்ணீருடன் அருந்தப்படுகிறது. வெட்டுக்காயங்களுக்கு மற்றும் ரத்தப்போக்கை குறைப்பதற்கு கருமஞ்சள் பொடி தடவப்படுகிறது.
5 கிராம் அளவிலான கருமஞ்சள் பொடியுடன், இரண்டு கிராம்பு மற்றும் இரண்டு காய்ந்த கொய்யா இலைகளை, 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து ஈறுகளில் வீக்கத்தை குறைக்க, வாய் கொப்பளிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு கருமஞ்சள் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். இது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
கருமஞ்சளை ஓமத்தின் விதைகளுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொடுத்தால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல் வியாதிகளுக்கும், காயங்களுக்கும், மூச்சு திணறல் ஏற்படும்போது வெளிப்புறத்தில் இருந்து விழுதாக உபயோகப்படுத்தப்படும் பொழுதும், உப்பு மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது சுளுக்கு மற்றும் வீக்கத்தை குறைக்கும் மருந்தாகவும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மருத்துவ முறைகளில், காய்ந்த கிழங்கின் பொடி மற்றும் இலைகள் வடிநீராக மூல வியாதி, தொழுநோய் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கும் வடிநீர் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலிக்கு உட்கொள்ளப்படுகிறது.கருமஞ்சள் மற்றும் நிலவேம்பின் விதை பொடி ,பாம்பு மற்றும் தேள் கடிக்கு விழுதாக தடவப்படுகிறது. முடக்குவாதத்திற்கு இக்கிழங்கின் விழுது பாதிக்கப்பட்ட இடங்களில் பூசப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் ஊற வைக்கப்பட்டு வெளிப்பூச்சு மருந்தாக உடலில் தேய்க்க பயன்படுத்தலாம்.
மருந்தாக உட்கொள்ளும் போது தேன், பால் அல்லது தண்ணீருடன் சேர்த்தே எடுத்துக் கொள்வது வழக்கம். ஒரு நாளைக்கு 500 லிருந்து 2000 மில்லி கிராம் அளவில் மட்டுமே உட்கொள்ளப்படலாம் என்றும் அறிவியல் ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் பிற உடல் உபாதைகள் உள்ளவர்கள் இக்கருமஞ்சளை உட்கொள்ளும் போது மருத்துவரின் கண்காணிப்பு மிகவும் அவசியமானது. உணவாக உட்கொள்ளப்படும் மஞ்சளை விட மிக அதிக அளவிலான மருத்துவ குணத்தை கொண்டிருப்பதால் மிகக் குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கருமஞ்சளுக்கு மருத்துவ குணம் மட்டும் அல்லாது மதம் சார்ந்த வழிபாடுகளிலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆசீர்வாதம் தரக்கூடிய பொருளாக நம்பப்படுகிறது. இத்தனை மருத்துவ குணங்களையும் கொண்ட இக்கிழங்கினை சரியாக கண்டறிய மூன்று முக்கிய பண்புகள் உள்ளது. இது ஒரு அரிய வகை கிழங்கு என்பதால் மிக அதிக அளவில் கிடைப்பதில்லை. இக்கிழங்கின் உட்புறம் நீளம் மற்றும் ஊதா வண்ணத்தில் சதைப் பகுதி இருக்கும். மிக அடர்ந்த நெடியையும் கற்பூரம் போன்ற நறுமணத்தையும் கொண்டிருக்கும்.
சில சமயங்களில் முழுமையான நீல வர்ணத்திலும் சில கிழங்குகளில் வட்ட வடிவிலான லேசான மற்றும் அடர் நிற கோடுகள் மாறி மாறி அமைவதாக இருக்கும். கருமஞ்சளின் இலைகள் அகலமான வெளிர்பச்சை நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் பிற வெள்ளை நிற கிழங்குகள் செயற்கையான நீல வர்ணம் பூசப்பட்டு விற்கப்படுகிறது. இவ்வாறான சமயங்களில் கிழங்கின் உட்புறம் உள்ள வட்ட வடிவான கோடுகளைக் கொண்டும், கற்பூரம் போன்ற வாசனையையும் கொண்டு சரியான கிழங்கை நாம் கண்டறியலாம்.
இத்தகைய அறிய மருந்தான கருமஞ்சளின் பண்புகளை அறிந்து நாமும் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை கொண்டாடி மகிழலாம்.
