அடேங்கப்பா, இத்தனை வைத்தியங்களா..?

வகை பிரிக்கிறார் இ.ஜே.சுந்தர்

அலோபதி மட்டுமே நோய் தீர்க்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள், உலகமெங்கும் எத்தனை வகையான மருத்துவ வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஏறத்தாழ 75% மக்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மரபு சார்ந்த மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர் என்கிறது உலக உலக சுகாதார நிறுவனம். நவீன மருத்துவமான அலோபதி தவிர, மரபு சார்ந்த மற்றும் மாற்று மருத்துவமுறைகள் இங்கு பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்ற முடிவுக்கு வருமுன், ஒவ்வொன்றையும் பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது.

சித்த மருத்துவம் என்கிற தமிழ் மருத்துவமே இந்த மண்ணின் மரபு மருத்துவம் என்பது சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் மருந்துப் பொருளாக சிலாசித்து, மான்கொம்பு, பவழம், தாளகம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தியச் செப்புக்கத்திகள் கிடைத்துள்ளன.

சிந்துசமவெளி மருத்துவமுறையின் வளர்ச்சியே தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவமாகும். இந்த மண்ணின் மூல மருத்துவமான தமிழ் மருத்துவத்தை உள்வாங்கியே ஆயுர்வேதத்தைப் பின்னர் வந்த ஆரியர்கள் உருவாக்கினர். அதர்வண வேதத்தில் இந்த மருத்துவத்தை நுழைத்தனர்.

வாயு, பித்தம், கபம் என்பதன் அடிப்படையில் உடல் நலத்தை வகைப்படுத்தும் தமிழ் மருத்துவத்தின் கோட்பாட்டை ஆயுர்வேதம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த இரண்டு மருத்துவ முறைகளும் உடல் ஐம்பூதத்தால் ஆனது என்கின்றன. இரண்டுமே நாடி பார்த்து நோய்களைக் கணிக்கின்றன. இரு மருத்துவமுறைகளிலும் ஏறத்தாழ ஒரே வகை மூலிகைகளும் பிற மருந்து பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவர்கள் மூலிகைகளைத் தாண்டி தாதுப்பொருட்களையும் (மினரல்), உலோகங்களையும் (மெட்டல்), காரசாரங்களையும் (உப்புகள்), பாஷாணங்களையும், (ஆர்சனிக் காம்பவுண்ட்), உபரசங்களையும் (செகண்டரி மினரல்ஸ்) மருந்தாகப் பயன்படுத்தும் அடுத்த நிலைக்குச் சென்றனர்.

யோகா எனும் உடற்பயிற்சி ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், யோகா எனும் சொல்லே ஓக அல்லது ஒரு வடிவத்தை ஒக்க (போல) உடலை இருக்க வைப்பது என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது எனப்படுகிறது. வர்மம் எனும் ஒரு தனித் துறையும் சித்த மருத்துவத்தில் உள்ளது.

யுனானி மருத்துவம் கிரேக்கத்தில் ஹிப்போகிரட்டஸ் (கிமு 460-377) அவர்களால் உருவாக்கப்பட்டு, எகிப்திற்குப் பரவி, பின் அரேபியாவில் வளர்ந்து முகலாயர் ஆட்சியில் இந்தியாவில் அறிமுகமானது. கோழை, ரத்தம், மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றின் சமநிலையின்மையே நோய்களுக்குக் காரணம் என்பது யுனானியின் அடிப்படை.

மனித உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கின் சமநிலையின்மையாகவும் இது பார்க்கிறது. மேலும் வளரிளம் பருவம், வளர்ந்த பருவம், நடுவயது, முதுமை என்று வாழ்க்கை நிலைகளையும் நான்காகக் கணக்கிடுகிறது. யுனானி மருத்துவம், முழுமையாக மனித உடலையும் மனதையும் இணைத்துப் பார்க்கிறது.

ஓமியோபதி மருத்துவம் டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ம் ஆண்டு ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. முள்ளை முள்ளால் எடுப்பது என்பதுபோல எதனால் நோய் வருகிறதோ, அதனாலேயே நோயைக் குணப்படுத்துவதுதான் ஓமியோபதி கோட்பாடு. ஒரு பொருளின் அளவு குறையக் குறைய அதன் வீரியம் மிகும் என்பது இதன் கொள்கை. உலகின் 2வது பெரிய மருத்துவ முறையாக ஓமியோபதி திகழ்கிறது.

உலகெங்கும் சீன மருத்துவம் புகழ்பெற்று விளங்குகிறது. கன்பூசியஸ் தத்துவத்தின் அடிப்படையில் இந்த சீன மரபுவழி மருத்துவம் உடல் உறுப்புகளை 5 இயற்கைப் பொருட்களுடன் இணைத்துப் பார்க்கிறது.

நெருப்பு – இதயம், சிறுகுடல்

பூமி – மண்ணீரல், வயிறு

உலோகம் – நுரையீரல், பெருங்குடல்

நீர் – சிறுநீரகம், சிறுநீர்ப்பை

மரம் – கல்லீரல், பித்தப்பை

வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிர்மறையும் நேர்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சார்ந்துள்ளன என்பதையும்; எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதையும் விளக்கும் இன் யாங் தத்துவமே இதற்கு அடிப்படை. மூலிகைகள், விலங்குகளின் உறுப்புகள், மனித உறுப்புகள் முதலிய 13,000 மருத்துவப் பொருள்கள் சீன மருத்துவத்தில் இடம்பெறுகின்றன. 40 சதவிகித சீனர்கள் இம்மருத்துவமுறையைப் பின்பற்றுகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பலநாடுகளில் பயன்படுத்தப்படும் மரபுவழி மருத்துவம் மூலிகைகளையும் ஆன்மிகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஆன்மிகச் சமநிலை மாறுகையில் நோய் ஏற்படுவதாக இதில் நம்பப்படுகிறது. புற்றுநோய், வலிப்பு. ஆஸ்துமா முதலிய சவாலுக்குரிய நோய்களை இம்மருத்துவம் குணப்படுத்துவதாகக் கூறுகின்றனர். சகாராவை அடுத்துள்ள நாடுகளில் 85 சதவிகித ஆப்பிரிக்க மக்கள் இம்மருத்துவத்தையே நாடுகின்றனர். அங்கு 200 பேருக்கு ஒரு நாட்டு மருத்துவர் என்ற விகிதம் மலைப்பூட்டுகிறது.

எனவே இந்த மருத்துவம்தான் சிறந்தது சட்டென்று சொல்லிவிட முடியாடு. இது நிலம், சுற்றுப்புறச் சூழல், காலம், தட்பவெப்பம் போன்றவற்றை கவனத்தில்கொண்டு, அந்தந்த பகுதிக்கு அந்தந்த பகுதி மருத்துவமுறையே சிறந்தது என புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Comment