உச்சகட்டம் எனும் காதல் மருந்து

டாக்டர் ஜெயராணி காமராஜ்

கணவன், மனைவி உறவின் ஆணிவேராக தாம்பத்திய உறவு இருக்கிறது. இதனை முழுமையாக அனுபவிக்கும் வழிகளை அறிந்துகொள்வோம்.

’ஆணின் துடிப்பு

அடங்கிவிடும்

பெண்ணின் தவிப்பு

தொடங்கிவிடும்’ 

                         – வைரமுத்து

காமம் மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த மன்மத சீதனம். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. திருமணத்துக்குப் பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள் அதில் திருப்தி அடையும் வரை ஈடுபவது இயல்பு. ஆனால், பாலியலில் ஈடுபடும் இருவரும் ஒரே சமயத்தில் ஆர்கஸம் எனும் உச்சகட்டத்தை அடைவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

அதேநேரம், முழுமையான பாலியல் அனுபவம் என்பது உறவில் இருவரும் உச்சகட்டம் அடைவதையே குறிக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ்.

உடலுறவில் உச்சகட்டம் (ஆர்கஸம்) என்பது என்ன?

’’உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவதும், பெண்களுக்கு கருப்பை வாயில் சுருக்கம் ஏற்படுவதும் அத்துடன் இருவருக்கும் ஓர் உன்னதமான உணர்வு ஏற்படுவதுமே உச்சகட்டம் என்று பலரால் பொதுவான கருதப்படுகிறது.

உச்சகட்டம் அடைந்த பெண்களிடம் கருப்பை வாய் சுருக்கம், உன்னதமான உணர்வு பற்றிய கேள்விகளுடன் மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன் எனும் பாலியல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு உடல்ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

இதேபோல் விந்து வெளியேறாமலேயே உச்சகட்டம் அடையும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.

பொதுவாக பிறப்புறுப்புகள் அல்லது ஈரோஜெனஸ் மண்டலங்களின் தூண்டுதலுக்குப் பிறகு செக்ஸில் உச்ச நிலை ஏற்படுகிறது. இது, பாலியல் தூண்டுதலின் உச்சத்தையும் இன்ப நிலையில் தீவிர உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது.  இயல்பாகவே ஆண், பெண் உடலுறவு என்பது இருவருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொருவரும் பாலியல் உச்சகட்டத்தை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள். இது, இயல்பானது மற்றும் ஆரோக்கியமானது. ஆனால், ஒருசில காரணங்களால் உச்சக்கட்டம் அடைவது சிக்கலாகிறது.

செக்ஸில் ஈடுபடும் இருவரது உடலும் பாலியல் பதற்றம் மற்றும் அழுத்தத்தை வெளியிடும். அப்போது செக்ஸ் தூண்டுதல் உச்சத்தைத் தொடுகிறது. இது அவர்களின் பிறப்புறுப்புகளிலும், உடலிலும் மிகத் தீவிரமான இன்ப உணர்வுகளை உண்டாக்கும். உச்சகட்டம் பொதுவாக சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும். உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆணின் உறுப்பு, விரைகள், பெண்ணின் பிறப்புறுப்பு, கிளிட்டோரிஸ், மார்புக் காம்புகள், ஆசனவாய் போன்றவையின் துண்டுதலுடன் உடலுறவின்போது உச்சகட்டம் ஏற்படலாம். செக்ஸ் மீதான விருப்பம், உற்சாகம், தூண்டுதல் போன்ற முன் விளையாட்டுகள் (ஃபோர்பிளே), புணர்ச்சி நிலை போன்றவையும் செக்ஸில் உச்சகட்டத்தை தீர்மானிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

உச்சகட்டத்தின் போது என்ன நடக்கும்?

உச்சகட்டத்தின்போது உடல் முழுவதும் சின்னச்சின்ன மாற்றங்கள் நடக்கும். செக்ஸில் ஈடுபடும் ஆண், பெண்ணுக்கு முதல் கட்டமாக பாலியல் பதற்றத்தை  உடல் வெளிப்படுத்தும். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்கள் வெளியிடப்படும். பிறப்புறுப்புகள் மற்றும் ஆசனவாயில் உள்ள தசைகள் மீண்டும் மீண்டும் சுருங்கி விரிகின்றன

இத்தகைய தசை சுருக்கங்கள் செக்ஸின் உச்சகட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, பெண்ணின் பிறப்புறுப்பு (யோனி) மற்றும் கருப்பையின் தசைகள் அடிக்கடி சுருங்கும். இந்நிலையில் பிறப்புறுப்பில் இருந்து சிறு அளவு திரவம் வெளியேறும். அதேபோல் ஆணுடைய உறுப்பின் அடிப்பகுதி தசைகள் சுருங்கும். இந்த தசை சுருக்கம் ஆணுக்கு விந்து வெளியேற வழிவகுக்கும்.’’

உச்சகட்டத்தை (ஆர்கஸம்) அடைந்த பிறகு என்ன நடக்கும்?

’’செக்ஸில் உச்சகட்டத்தை அடைந்த சில நிமிடங்களில், இருவரது உடலும் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆண் உறுப்பு நீண்ட, உயர்ந்த நிலையில் இருந்து மீளும். அதேபோல் பெண் உறுப்பு சற்று புடைத்த (வீங்கிய) நிலையில் இருந்து இயல்பான தன்மைக்குத் திரும்பும்.

ஆண் பெண் இருவருமே திருப்தி, தளர்வு அல்லது சோர்வு உணரலாம்.உச்ச நிலையை அடைந்த பிறகு மீண்டும் செக்ஸில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அடைவதற்கு சிறிது நேரம் தேவைப்படலாம். இந்த கால அளவு வித்தியாசம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

செக்ஸில் ஈடுபடும் தம்பதியர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான திருப்தியை காண நேரும். ஒவ்வொருவிதமாக உணர முடியும். இந்த வேறுபாடுகள் இயல்பானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையே.

பாலுறவில் ஈடுபடும் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியே மிக விரைவில் ஒரு விஷயம் புரிந்துவிடும். அதாவது எந்தவித செக்ஸ் நடவடிக்கை, எந்த மாதிரியான தூண்டுதல், எவ்வளவு நேரம் ஈடுபடுவதால் உச்சகட்டம் அடைய முடிகிறது என்பது தெரிந்துவிடும். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் உலகளவில் பல தம்பதிகள் தனக்கு இந்த நிலை வேண்டும் என்று மனவிட்டு இருவரும் பேசி, உரையாடி புரிந்துகொள்வதில்லை.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் சமுதாய நிலை, கலாச்சாரம், நாகரிகம், நாணம், கட்டுப்பாடுகள், பெண் அடிமைத்தனம் போன்ற காரணிகளால் ஒரு பெண் தன் விருப்பத்தை ஆணிடம் விளக்குவதே இல்லை. ஆணும் தன்னோடு உறவில் ஈடுபடும் பெண்ணிடம் இது பற்றி கேட்பதும் இல்லை. தனக்கு சுகம் கிடைத்துவிட்டால் போதும் என்கிற நிலையில்தான் மனவளம் பெற்றிருக்கிறார்கள். 

சில நேரங்களில் அதிக தூண்டுதல் இல்லாமல், விரைவாக உச்சக்கட்டத்தை அடையலாம். சில நேரங்களில் உச்சம் தொட அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும்.

உச்சகட்டம் என்பது ஹார்மோன்களின் கலாட்டாவா?

‘’உச்சகட்டத்தின்போது, உடல் டோபமைன் எனும் ஹார்மோனை வெளிப்படுத்துகிறது. இது உடலுக்கு நல்லது விளைவிக்கிற நல்ல ஹார்மோன் ஆகும். அதே போல் சில நேரங்களில் ஆக்ஸிடாஸின் எனும் ஹார்மோனும் வெளிப்படும். இந்ந்த ஹார்மோனுக்கு ‘காதல் மருந்து’ என்று பெயர் சூட்டியிருக்கிறது நவீன மருத்துவ உலகம்.

இந்த ஹார்மோன்கள் மகிழ்ச்சியையும் நேர்மறை உணர்ச்சிகளையும் அதிகரிக்கச் செய்யும். மேலும் இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தை தருகிற ஹார்மோனான கார்டிசோலை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவை.’’

தம்பதிகள் உச்சகட்டத்தை அடைவதில் எவை எல்லாம் தடையாக இருக்கும்?

’’உச்சகட்டத்தை அடைய தம்பதிகள் வெவ்வேறு முறைகளை கையாளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் கற்பனை, விருப்பத்தின் பங்கு அவசியமானது.  மனதளவில், உரையாடல் அளவில் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்க வேண்டும். கம்யூனிகேஷன் மிக முக்கியம். நன்றாகப் பேசி சிரித்து மகிழாத தம்பதிகள் செக்ஸில் ஈடுபட்டாலும் அவர்களால் உச்சகட்டத்தை அடைவது அரிதான செயலாகவே இருக்கும்.

செக்ஸ் பற்றிய தவறான கருத்துகளும் உச்சகட்டத்துக்கு தடைகளாகிவிடலாம். ஹைபோகோனாடிசம் போன்ற ஹார்மோன் சமநிலையின்மையும் ஆர்கஸத்துக்கு கதவை சாத்தும். துணையுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பு அல்லது அரவணைப்பு, புரிதல் இல்லாமையும் ஒரு முக்கிய தடையாகும்.

உடலுறவில் நிகழ்ந்த மோசமான அனுபவங்கள், ஆரோக்கியமற்ற உடல்நிலை, மன ஆரோக்கியம், சில உளவியல் நிலைமைகள், மன அழுத்தம். உட்கொள்ளும் சில  வகை மருந்துகள், மதுப் பழக்கம் போன்றவை உச்சகட்டத்தை அடைவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

செக்ஸில் உச்ச நிலை அடையாத ஆணோ, பெண்ணோ அதை நினைத்து மனசுக்குள்ளேயே வைத்து புழுங்கிக்கொண்டிருக்காமல், தனது இணையிடம் மனம்விட்டு பேசியே இந்நிலையில் இருந்து மீள முயற்சிக்கலாம், அல்லது சிறந்த  பாலியல் நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒரு பெண் கருவுறுதலுக்கும் செக்ஸில் உச்சகட்டம் அடைவதற்கும் தொடர்பே இல்லை. ஆறேழு குழந்தைகளைப் பெற்ற பெண் ஒருபோதும் உச்சகட்டத்தை அடையாமலே கரு தரித்திருக்கலாம்.

Leave a Comment