மாத்திரை போட கத்துக்கோங்க

ஹெல்த் டிப்ஸ்

காய்ச்சல், உடல்வலி என்று எந்த பிரச்னைக்கு டாக்டரைப் பார்த்தாலும் கண்டிப்பாக மாத்திரைகள், டானிக் எழுதிக் கொடுப்பார். ஆனால், அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்து எந்த மருத்துவரும் பொதுவாக விவரிப்பதில்லை.

நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக மாத்திரை போட்டு தண்ணீரும் குடித்துவிடுகிறார்கள். இதை விட மாத்திரை, மருந்து மூலம் அதிக பலன் கிடைக்கவேண்டும் என்றால் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவ அறிவியல் படி பார்க்கலாம். 

  • சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரத்துக்கு பிறகு மாத்திரை போடுவது நல்லது. அதேபோல் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து மாத்திரை போடுவது அதிக பலன் தருகிறது. மருந்து முக்கியமாக மாத்திரை அல்லது கேப்சூல் வயிற்றில் விரைவாக கரைய வெந்நீர் உதவுகிறது. மருந்து விரைவாக ரத்தத்தில் கலப்பதால் வேகமாகச் செயல்படத் தொடங்கும்.
  • வெதுவெதுப்பான தண்ணீர் தொண்டை தசைகளை தளரச் செய்து மாத்திரையை எளிதாக விழுங்க உதவுகிறது. வெதுவெதுப்பான தண்ணீர் வயிற்றின் தசைகளை தளரச் செய்து, சில மருந்துகளால் ஏற்படுத்தும் எரிச்சலைக் குறைக்கிறது.
  • குளிர்ந்த நீரில் மருந்து எடுத்துக்கொள்வது தவறு இல்லை என்றாலும் மருந்தின் செயலாற்றல் தாமதமாகும்.

  • டீ, காபி, பால், ஜூஸ், சோடா போன்றவற்றுடன் மருந்து எடுத்துக்கொள்வது, அவற்றின் வீரியத்தைக் குறைத்துவிடலாம். செயற்கை குளிர் பானங்களில் உள்ள ரசாயனத்தில் மருந்து கலப்பது அதன் செயல்திறனை குறைக்கலாம், சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தவும் செய்யலாம்.
  • குறிப்பாக பாலுடன் மாத்திரை சாப்பிடுவதால் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் (Tetracycline, Ciprofloxacin) செயலைத் தடுக்கிறது. கிரேப் ஜூஸ் கல்லீரல் மருந்து செயல்படும் விதத்தை மாற்றுகிறது. எனவே வெந்நீரே மருந்து சாப்பிடுவதற்கான நியூட்ரல் திரவம். 

ஒரு மடக்கு தண்ணீர் குடித்து மாத்திரை போடுவதை விட 100 முதல் 200 மில்லி வரை தண்ணீர் குடிப்பது நல்லது. மாத்திரை எடுக்கும் முன்பும் பின்னரும் சுமார் 30 நிமிடங்கள் வேறு பானங்கள், உணவு தவிர்ப்பதும் நல்லது.

ஒரு சில மருந்துகள் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட மாத்திரைகள் எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு, அதனை தெளிவாகப் பின்பற்ற வேண்டும்.

Leave a Comment