எழுத்தாளர், நடிகர் வேல ராமமூர்த்தி
மண் மணம் பேசும் படைப்புகளுக்காகப் பேசப்படுபவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் குற்றப்பத்திரிகை நாவலை எழுதியவர். பட்டத்து யானை, அரியநாச்சி, குருதி ஆட்டம், போன்ற படைப்புகளும் இவரது மண் மணம் பேசும் சிறுகதைகளும் பிரபலமானவை. இப்படி எழுத்தாளராக அறியப்பட்ட வேல ராமமூர்த்தி இப்போது திரைப்பட நடிகராகப் புகழ் பெற்று விட்டார் . சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார். அவர் தனது ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இங்கே!
“நான் கிராமத்தில் வளர்ந்தவன். ஓரிடத்தில் சோம்பி இருக்க மாட்டேன். நிலை கொள்ளாமல் இருப்பேன்.
நான் அப்போதைக்கு பியூசி முடித்து 16 வயது கடந்து இருந்தேன். ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு ஒரு நண்பனுடன் சென்னை வந்து விட்டேன். சென்னையில் சில நாட்கள் இருந்தேன். ஒரு வழியாக ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் இடத்திற்குச் சென்றேன் .எக்கச்சக்கமான கூட்டம். நமக்கு இடம் கிடைக்காது என்று நினைத்தேன்.
என் உயரத்தை வைத்து என்னை உள்ளே சேர்த்துக் கொண்டார்கள் .எடை குறைவாக இருந்ததால் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டுச் சென்றேன். அந்த கூட்டத்தில் தேர்வான மூன்று பேரில் நான் ஒருவன்.
நான் தேர்வாகி விட்டேன், ஒயர்லெஸ் ஆபரேட்டராக பணி. ஜபல்பூர் சென்று அங்கே பயிற்சி. ராணுவத்தில் 6 மாதங்கள் கடுமையான பயிற்சிகள் அளித்தார்கள்.12 அடி உயரச் சுவரை எகிறிக் குதித்து தாண்ட வேண்டும். தோளில் சுமையுடன் கம்பி வலைக்குள் நகர்ந்து செல்ல வேண்டும். பயிற்சி கடுமையானது என்றாலும் நான் விருப்பத்தோடு செய்தேன். அந்தக் கடுமை தாங்க முடியாமல் வெளியே சென்றாலும் முடியாது. விட மாட்டார்கள். இப்படி ஐந்தாண்டுகள் பணிபுரிந்தேன். அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் திரும்பி வந்து விட்டேன் .பிறகு அஞ்சல் துறையில் பணியாற்றினேன்.

ராணுவத்தில் சேர்ந்து அங்கே பெற்ற தீவிரமான பயிற்சிகள் என் உடல் மீது அக்கறை கொள்ள வைத்தது.உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்பை அளித்திருந்தது. சத்தான சரியான ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தேன்.உடற்பயிற்சியும் அவசியம் என்பதை உணர்ந்தேன்.
எங்கள் வீட்டில் சாப்பாட்டிற்குக் குறைவு இல்லை. எப்போதும் அசைவ உணவு தான் அதிகமாக இருக்கும். ஆட்டுக்கறி, மீன் உணவுகள் இப்படியே நான் வளர்ந்தேன். ஆட்டுக்கறி என்றால் கூட வெள்ளாடு கிடாரியாக இருக்க வேண்டும். வயதானவை பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் தொடமாட்டோம். குட்டியும் இளந்தாரியாக இருக்க வேண்டும். கோழி என்றால் நாட்டுக்கோழி தான் சாப்பிடுவோம்.
கிராமத்தில் இருந்தபோது எல்லா கிணறுகளிலும் குதித்து நீச்சல் அடிப்பேன்.நான் இறங்காத கிணறு இல்லை. விளையாட்டு என்றால் கிணற்றில் நீச்சல் அடிப்பது, விளையாடுவது, மரங்களில் ஏறுவது தாவுவது என்று இருப்போம்.
ராணுவத்தில் இருந்தபோது நான் சிறந்த வாலிபால் ஆட்டக்காரனாக இருந்தேன். அதுமட்டுமல்ல அங்கே குத்துச்சண்டையும் கற்றுக் கொண்டேன் . ஒரு பாக்ஸராக வெளியே வந்தேன்.
இப்படி எனது உடல் குறித்த கவனமும் பிட்னஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ராணுவ காலத்திற்குப் பிறகு என் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்டது.
ராணுவத்தில் இருந்து ஊர் திரும்பிய போதும், நான் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க மாட்டேன் .இயங்கிக்கொண்டே இருக்குமாறு என் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வேன். எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும் வயிறு நிறைய சாப்பிட மாட்டேன். அளவோடு தான் சாப்பிடுவேன். சத்துள்ளதாகவே சாப்பிடுவேன். இன்றுவரை பிடித்த சாப்பாடு தான் எனக்குக் கிடைக்கும். வெளியூர் சென்றால் கூட கண்ட கண்ட உணவுகளை நான் தொடுவதில்லை.
வெளியே சென்றாலும் தவறாமல் வீட்டு சாப்பாட்டு அம்சங்களைத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். துரித உணவுகளைத் தொடுவதே இல்லை. நகரங்களில் உள்ள ஹைபிரிட் காய்கறிகளை நான் சாப்பிடவே மாட்டேன். அதேபோல துரித உணவுகள், பாஸ்ட் ஃபுட் என்பதைத் தொடவே மாட்டேன்.
எவ்வளவு ருசியாக இருந்தாலும் நொறுக்குத் தீனி எடுத்துக் கொள்ளவே மாட்டேன். மூன்று வேளை உணவு தான் சாகிற வரை வாழப் போகிறோம் அந்த வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
சென்னை போன்ற நகரங்களில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மூன்று விஷயங்கள் எப்போதும் தெரியும். கடைகளில் ஹைபிரிட் காய்கறிகள், பாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவகங்கள், மட்டுமல்ல புதிய புதிய மருத்துவமனைகளும் தான்.
படப்பிடிப்பு நாட்களில் நான் பிசியாக இருப்பதால் என்னால் சரியாக உடற்பயிற்சியும் நடைபயிற்சியோ செல்ல முடியவில்லை. இருந்தாலும் நான் நடந்து செல்கிறேன். நான் ஹோட்டலில் தங்கும் போது ஐந்தாம் தளம் ஆறாம் தளம் என்று அறை எடுத்துக் கொள்வேன்.
அவ்வளவு படிகளிலும் நடந்தே செல்வேன். நடந்தே ஏறுவேன் இறங்குவேன் .இந்தப் பயிற்சி வேண்டும் என்றே லிஃப்டை நான் பயன்படுத்துவதில்லை. படிகளில் நடப்பதையே ஒரு நடைப் பயிற்சியாக எடுத்துக் கொள்கிறேன். என் உடலுக்கு பிரச்சினை என்று மருத்துவமனை சென்ற நாட்கள் மிக மிக குறைவு. எனக்கு எந்த மருந்து மாத்திரை பெயரும் தெரியாது. எனக்குத் தெரிந்த இரண்டு மாத்திரைகள் அனாசின், சாரிடான் மட்டும்தான்.
மற்றபடி நான் மாத்திரை சாப்பிட்டதில்லை. உணவே மருந்து என்று நான் இருப்பேன். எங்கள் வீட்டில் எந்த உணவாக இருந்தாலும் அதில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் என்று மருந்துப் பொருள்களைச் சேர்க்காமல் இருக்க மாட்டார்கள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.நான் எனக்கு நினைவு தெரிந்து எப்போது மருத்துவமனைக்குச் சென்றேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். மருத்துவ சோதனைக்குக்கூட சென்றதே இல்லை.
என் உடலை நான் கவனித்துக் கொள்கிறேன் .உடல் என்னைப் பார்த்துக் கொள்கிறது. அதற்கு எது நல்லது கெட்டது என்று தெரியும். இத்தனை ஆண்டு காலம் என்னுடன் இருக்கும் என் உடலுக்கு எது நல்லது கெட்டது என்பது என்னை விட யாருக்குத் தெரியும்?
என்னைத் தவிர வேறு யார் என் உடம்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்?

என் உடலுக்கு நான் தான் மருத்துவர். இதுதான் என் கருத்து .நமது பாரம்பரிய முறைப்படி சாப்பிட்டால் நமக்கு மருந்து தேவை இல்லை.
வெளியூர் பயணங்கள் என்று படப்பிடிப்புக்குச் செல்வதால் இந்தப் பாரம்பரிய உணவு தடைப்பட்டு விடுகிறது. அதனால் வெளியில் தங்கும் போது எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்கிறேன்.
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இருந்தாலும் அளவோடு வைத்துக்கொள்வேன். என் உடல்நிலை மீது எப்போதும் அக்கறையாக இருப்பேன்.
ரஜினி சார் படத்தில் நடிக்கும் போது தொலைவில் இருந்து என்னைப் பார்த்து மிகவும் ரசிப்பார். எனது நடை அவருக்குப் பிடிக்கும் என்பார். என்னென்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், நடைப்பயிற்சி எவ்வளவு நேரம் என்றெல்லாம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.
அன்று ராணுவத்தில் பெற்ற பயிற்சிதான் என் உடலைக் கட்டாக வைத்திருப்பதற்கும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கும் பெரிய தூண்டுதல் என்பேன்.இது பற்றிய புரிதலையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது அன்று நான் பெற்ற கடுமையான பயிற்சிகள் தான் என்று கூற வேண்டும்.
என் மனம் எப்போதும் தெளிவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன். உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தது.உடல் நலமும் மன நலமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.ஒன்றின் பாதிப்பு இன்னொன்றில் தெரியும்.
நான் ராணுவத்தில் சேர்ந்த போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்கள். முதல் நாளே அத்தனை குறிகளையும் சரியாகச் சுட்டு பாராட்டு பெற்றேன். அதற்கு காரணம், திடகாத்திர உடல் தெளிவான மனம் தரும். சஞ்சலமும் ஊசலாட்டமும் கொண்ட மனம் உடம்பை ஆற்றலுடன் இயங்க வைக்காது. எனவே எது குறித்தும் நான் அலட்டிக் கொள்வதில்லை,
என் மனதை சிக்கலாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். மனச்சிக்கல் இல்லாததால் எனக்கு மலச்சிக்கல் கிடையாது. ஜீரண சக்திக் குறைபாடும் கிடையாது.
என் உயரம் எனக்குத் தெரியும். எந்தப் புகழையும் நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். எப்போதும் நான் நானாக இருப்பேன். இவ்வளவுதான் என்ற ஆரோக்கிய ரகசியம்” என்றார்.
- அருள்செல்வன்
